பிரிட்டிஷ்  இந்தியா - இருண்ட பக்கங்கள்  - சசி தரூர் புத்தகத்தில் இருந்து  

திரு ஜெயமோகன்  எழுதிய ஊமைச் செந்நாய் கதை படித்து விட்டு அதன் பாதிப்பிலேயே சில நாள் இருந்தேன். கதையில் வரும் சம்பவங்கள் என் மனதில் ஓடிகொண்டே இருந்தது. கிராமத்தில் அந்த வெள்ளையன் இருந்த வீடு , அந்த வெள்ளையனின் முகம் ,காட்டுப் பகுதிகள் எல்லாம் என் மனக்கண்ணில் வந்து கொண்டிருக்கும் போது, சசி தரூர் எழுதிய An Era of Darkness என்ற புத்தகம் Kindle இல் கண்ணில் பட, அதை வாசிக்கும் பொழுது பல இது வரை நான் அறியாத பல பிரிட்டிஷ் ஆட்சி பற்றிய  விவரங்களை அவர் அந்த புத்தகத்தில் தந்து இருந்தார்.  சற்று மிகை படுத்துதல் இருந்தாலும் இந்தியாவின் அந்த இருண்ட காலத்தை பற்றி வரலாற்று ஆதாரத்துடன் படிக்கும் பொழுது மனதை பாதிக்க  வைப்பதாக இருந்தது. பிரிட்டானிய ஆட்சி பற்றிய விவரங்கள் ஏராளமாக எழுதப் பட்டு விட்டாலும் சில விஷயங்கள் சற்றே   அதிர்ச்சி அளிப்பதாக எனக்கு பட்டது. சசி தரூர் புத்தகத்தில் உள்ள சில தகவல்கள் அல்லது அவரது கருத்துக்களில் குறிப்பிடத்தக்கவையாக உள்ள விஷயங்கள்..

1.பிரிட்டிஷ் இந்தியாவில் ஏற்பட்ட பஞ்சங்களில் மட்டும் கிட்டத்தட்ட 3 கோடியில் இருந்து 3.5 கோடி இந்திய மக்கள் மரணித்தார்கள். பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் பேரழிவு என வர்ணிக்கும் சசி தரூர் , இதனை தடுக்க எந்த முயற்சியும் அன்றைய ஆட்சியாளர்கள் எடுக்க வில்லை எனவும் மேலும் பல பொருளாதார வியாக்கியானங்களை வைத்து  மீட்பு நடவடிககைகளையும் கூட தடுத்து உயிர் பலியை அதிகப்படுத்தினர் எனவும் கூறுகிறார் .(Malthusian economic principle was invoked to justify the mass deaths- growth in
population beyond the ability of land to sustain is taken care of by nature by destruction of lives). அவர்களின் மற்ற காலனிகளில் வேலை செய்ய ஆட்கள் தேவைக்காகவும் பஞ்சங்களில் பிரிட்டிஷ் தலையீடு பெரிதாக இல்லை எனவும் சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இப்படி மரித்த மக்களில் பெருவாரியானவர்கள்  சமூகத்தில் பின் தங்கிய சாதியினரே  என்பதை சொல்லி அறிய வேண்டியது இல்லை என நினைக்கிறேன்.
வங்காள பஞ்சத்தில் மட்டும் 1943 இல் 40 லட்சம் மக்கள் மாண்டனர். இதை பற்றி வின்ஸ்டன் சர்ச்சில் கருத்து கூறுகையில், பஞ்சம் வந்ததற்கு இந்தியர்களே காரணம், அவர்கள் முயல்களை போல பிள்ளைகளை  பெற்று போட்டு கொண்டே இருக்கிறார்கள், பிரிட்டன் காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றும்  காந்தி தான் இன்னும் சாகவில்லையே  எனவும் ஏளனமாக சொல்லி இருக்கிறார்.


மிகப் பெரிய அளவில் நிகழ்ந்த பஞ்சங்களில் சில.

Great Bengal Famine (1770), Madras (1782-83) Chalisa famine (1783-84)
in Delhi, Doji Bara famine (1791 -92) around Hyderabad, Agra famine (1837-38), Orissa famine
(1873-74), Southern India famine (1876-77), The Indian famine (1896-1900 ), Bombay famine (1905-06) and Bengal famine (1943-44)

1770-இல் இருந்து 1900 குள் 2.5 கோடி பேர் இறந்ததாகவும் அதில் 1.5 கோடி மக்கள் 19-ம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியிலும் மேலும் ஒரு கோடி மக்கள் 20 ம் நூற்றாண்டிலும் இறந்து போனதாக கணக்கு சொல்கிறது. இந்த கணக்குகள் மிகுந்த கோபத்தை அளித்தாலும் இதனை ஸ்டாலின் நடத்திய படுகொலைகளுடனும் மாவோவின் கலாச்சார புரட்சியின் பொது நடை பெற்ற 4.5 கோடி மக்கள் மாண்ட சம்பவங்கள் மற்றும்  இரண்டாம் உலக போரில் நிகழ்ந்த 55 மில்லியன் உயிர் இழப்பு உடன் சேர்த்து பார்ப்பதை தவிர்க்க முடியாது. மனிதன் தன வரலாற்றில் நிகழ்த்திய பேரழிவில் ஒன்றாக இதை பார்க்க வேண்டும் என தரூர் சொல்கிறார்.  சுதந்திரத்துக்கு பின் இந்தியாவில் பெரிய பஞ்சம் எதுவும் ஏற்பட வில்லை என்பது உண்மை.

2.இந்தியாவை ஒன்றாக்கியதில் 100 சத பங்கு பிரிட்டிஷ் ஆட்சிக்கே உரியது
என்ற பரவலான ஒரு கருத்து முழுமையாக சரி என்று சொல்ல முடியாது என்று சசி கருதுகிறார்.
இந்த நிலப்பரப்பு முழுவதும் உள்ள மலைகள் ஆறுகள் கோவில்கள் புனித ஸ்தலங்கள் ஆகியவற்றை அனைத்து பகுதி மக்களும் புனிதம் ஆக நினைத்தனர். இதில் ஆச்சர்யப்படத்தக்க விஷயம் என்ன என்றால் இது சாதி மதங்களை கடந்து இருந்தது. நமக்கு தெரிந்த வரையில் வரலாறு முழுவதும் இதற்கான சான்றுகளை பார்க்க முடிகிறது .மன அளவிலான ஒரு ஒருமைப்பாடு இருந்ததால்,,மேலை நாட்டு ஆக்கிரமிப்பாளர்கள் இந்த நாட்டிற்கு வரவில்லை என்றாலும் ஏதோ ஒரு வகை அரச ஒருங்கிணைப்பு நிச்சயம் ஏற்பட்டு இருக்க வாய்ப்புகள் நிச்சயம் இருந்திருக்கும்.(Great empire state would have been formed by some valiant group like in Japan)

3 பிரிட்டிஷ் ஆட்சியில் லஞ்சம் - ராபர்ட் கிளைவ் ஆரம்பித்த அரசு லஞ்ச லாவண்யம் கிட்டத்தட்ட இன்று  வரை தொடர்வதை பார்க்க முடிகிறது.
இந்தியா சுதந்திரம் பெற்ற போது, அரசு இயந்திரம் அப்பிடியே பெரிய மாற்றம் ஏதும் செய்யப்படாமல் இருந்ததால் ஊழல் மலிந்து இருந்த (பெரிய வெள்ளைக்கார அதிகாரிகள் மத்தியில் பரவலாக) நிர்வாகம், அதன் தொடர்ச்சியாகவே இன்று வரை இருக்கிறது என்று சொல்லலாம் என சசி கூறுகிறார்.

4 இந்தியாவில் செல்வம் ஏராளமாக இருந்தது எனவும் மேல நாட்டினர்
அதற்காகவே இந்தியாவை நோக்கி வந்து கொண்டு இருந்தனர் என அறிவோம். இழந்த அந்த செல்வ செழிப்பு இன்றைய மதிப்பில் எவ்வளவு என் யாரும் மதிப்பு போட்டது இல்லை. உலக வர்த்தக சந்தையில் இந்தியாவின் பங்கு என்பது 27 சதவிகிதமாக 1700 களில் இருந்ததாக பிரிட்டிஷ் பொருளாதார வரலாற்று ஆய்வாளர் அங்கஸ் மேடிசன் குறிப்பிடுகிறார். 1947 -இல் மூன்றாக நமது சந்தை மதிப்பு சரிந்தது. சமீப காலம் வரை இந்தியாவில் வெளி நாட்டுப் பொருள் மோகம் இருந்தது போல் (அமெரிக்கா இங்கிலாந்து சிங்கப்பூர்  போன்ற நாடுகளின் ) அப்பொழுது இங்கிலாந்தில் இந்திய பொருள் மீது பெரிய மோகம் சாதாரண மேலை மக்களுக்கு இருந்தது. இங்கிலாந்தில் தயாரித்த பொருள்களை கூட இந்தியாவில் தயாரித்ததாக பொய் சொல்லி விற்கும் வழக்கம் இருந்தது என்பது ஆச்சர்யம் தரும் உண்மை.
வருவாயில் வசூலிக்க பட்ட வரி மட்டும் 50 சதம்  இருந்ததால் மூன்றில் இரண்டு பங்கு நிலச்சுவான்தார்கள் நிலத்தை  விட்டு  விட்டு ஓட நேர்ந்தது.
ராபர்ட் கிளைவ் மட்டும் இங்கிருந்து கொள்ளை அடித்த பணத்தின் இன்றைய மதிப்பு 40 மில்லியன் பவுண்ட். இந்த கொள்ளைகளை பற்றியே ஒரு தனி கட்டுரை எழுதலாம். வில்லியம் டிக்பி என்பவர் 19 ஆம் நூற்றாண்டில் மட்டும் கொள்ளை அடிக்கப் பட்ட பணம் என்பது அன்றைய மதிப்பில் 420 கோடி பவுண்ட். (மிக குறைந்த மதிப்பீட்டில்) இருபதாம் நூற்றாண்டில் இதை விட பல மடங்கு பணம் கொண்டு செல்லப் பட்டது.


5 பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்த வெள்ளையர்களின் எண்ணிக்கை 1805 - இல் வெறும் 31000 பேர். 1890-இல் 6000 பிரிட்டிஷ் அதிகாரிகள் , அவர்களோடு 70000 ஐரோப்பிய சிப்பாய்கள் 25 கோடி இந்திய மக்களை ஆண்டனர். 1931 ஆம் வருடம் இருந்த  பிரிடானியர்களின் எண்ணிக்கை 168000. அதில் ராணுவத்தில், போலீசில் 60000 பேரும், சிவில் நிர்வாகத்தில் 4000 வெள்ளை அதிகாரிகளு ம் இருந்தனர். அப்போதைய மக்கள் தொகை 30 கோடி. எந்த காலத்திலும் , வெள்ளையர்களின் மொத்த எண்ணிக்கை 0.05 சதத்தை எட்டியது இல்லை.
மிக எளிதாக வெல்லப்பட்ட ஒரு ராஜ்யம், ஒரு சிலரின் துரோகத்தாலும்  பலரின் எதிர்ப்பின்மையாலும் மிக நீண்ட காலம்
 நீடிக்க அனுமதிக்க பட்டது.

6 இந்தியர்கள் பிரிட்டிஷ் காலனிகளில் பணி புரிய உலகெங்கும் கொண்டு செல்லப்பட்டார்கள் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் எத்தனை லட்சம் மக்கள் எந்த மாதிரி சூழ் நிலையில் கொண்டு செல்லப்பட்டார்கள் என்பதோ அவர்கள் சென்ற இடங்களில் எப்படி கொத்தடிமையாக வதைபட்டு கிடந்தனர் என்பது பற்றிய தகவல் அதிகம் சொல்லப்படவில்லை. அவர்களில் மிகப்பலர் மிருங்களைப் போல கப்பல்களில் அடைத்து செல்லப் பட்டு செல்லும் வழியே நோயாலும் போதிய இடமின்மையாலும் இறந்து போயினர்.
இவ்வாறு கட்டாய உழைப்பிற்க்காக அழைத்து சென்றவர்களின் எண்ணிக்கை
பல லட்சங்களாகவும், அதில் கணிசமான மக்கள் பாதி வழியே கப்பல்களில் போதிய இட வசதி இன்றியும் கொள்ளை நோய்களிலும்  மாண்டும் போயினர்.
இவ்வாறு கப்பலில் செல்வதே சாவதற்கு செல்லும் லாட்டரி என்றே அந்நாளில் அழைக்கப் பட்டது.  (death lottery)

                     இன்னும் ஏராளமான விவரங்களை அந்த புத்தகம் தருகிறது. ஆங்கிலேய ஆட்சியில் நடந்த தவறுகளுக்கு பிராயச்சித்தமாக பிரிட்டன் இந்தியாவிற்கு வருடத்திற்கு 1 பவுண்ட் வீதம் 200 வருடத்திற்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என சசி தரூர் oxford union debate இல் குறிப்பிட்டதன் பின்னணியில் இந்த புத்தகம் எழுதப்பட்டது என சொல்கிறார். நமது அன்றைய முன்னோர் செய்த தவறுகளும், நாம் வெள்ளையர்களோடு ஒப்பிடும் பொழுது
நமது மன்னர்களுடைய போர் செய்யும் முறையும் ஆயுதங்களை கையாள்வதில் பின் தங்கி  இருந்ததும்  நாம் அடிமையாக இருந்ததற்கு முக்கிய காரணிகளாக இருந்தாலும், பிரிட்டிஷ் காரர்கள் இங்கு வராவிட்டாலும் அறிவியல் முன்னேற்றங்களும் மற்ற சமுதாய மாறுபாடுகளும் இந்தியாவிற்கு எப்படியும் வந்து இருக்கும் எனவும் சசி  தரூர் குறிப்பிடுகிறார்.
       
                                 ***********   ************





Comments

Popular posts from this blog

Hindus in Hindu Rashtra book - my impressions

Spectrum of Left - Part 1 / Time to retrieve left from orthodoxy

கொடைமடம் - நாவல் வாசிப்பு