மகாத்மாவுடன் ஒரு நேருக்கு நேர்

மகாத்மா காந்தி அவர்கள் தொலைக் காட்சி நேர்காணல் நிகழ்ச்சியில் இன்றைய தினம் பங்கேற்றால் எப்படி கேள்விகளும் பதில்களும் இருக்க கூடும் என்பது பற்றி The Tribune என்ற பத்திரிகையில் வந்த கற்பனை உரையாடல் தமிழில்:

 காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரை வைத்து ஒரு தொலைக்காட்சி  சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.

வேகமாகவும் வள வள வெனவும்  பேசுகின்ற நெறியாளர், கண்களை கூசும் வண்ண வண்ண விளக்குகள் போன்றவற்றினால் எந்த விதத்திலும் நிலை குலையாமல் தொடுக்கப் படும் கேள்விகளை காந்தி எதிர்கொள்கிறார்.
நேர்காணலில் இருந்து சில பகுதிகள்.

நெறியாளர் ::  எங்களை சந்திக்க இசைந்தமைக்கு நன்றி. நமக்கு நேரம் 10 நிமிடங்களே உள்ளதால் நேரடியாக முதல் கேள்வி . பாபு என்று அழைக்கலாமா தங்களை? காந்தி படத்தில் நீங்கள் அப்படித் தான் அழைக்கப்பட்டீர்கள் அல்லவா?  ஆனால் பென் கிங்ஸ் லீ போலவே நீங்கள் இல்லையே.                  .                                  

காந்தி: நன்றி. பாபு என்றே என்னை நீங்கள் அழைக்கலாம்.                                  

நெறியாளர் : நீங்கள் தவறாக எண்ணக் கூடாது. ஏன் உங்களின் பிறந்த தினத்தை நாங்கள் வருடா வருடம்கொண்டாட வேண்டும்?                  

காந்தி : என் பிறந்த தினம் ஏன் அனுசரிக்கப்படுகிறது என்று உண்மை யில் எனக்குத் தெரியவில்லை. வருடத்திற்கு ஒரு முறை எனது கோட்பாடுகள் கொள்கைகள் படி நடக்கிறோம் என்று வேஷம் போடுவதற்கு அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால் அது தேவைப்படலாம். அன்றைய தினத்தில் ராஜ் காட் என்று நீங்கள் அழைக்கும் இடத்திற்கு சென்று அவர்கள் அந்த வருடத்தில் செய்த பாவங்களை கழுவும சடங்காவதற்கு உதவலாம். அதை சுத்தமான போலித்தனம் என்றே நான் கூறுவேன்.

நெறியாளர்: நல்லது பாபு. இப்பொழுது நான் உங்களை நேரிடையாக கேட்கிறேன். சர்தார் படேல் அவர்களை இந்திய பிரதமர் ஆக விடாமல் ஏன் தடுத்து விட் டீர்கள் ? அப்படி நீங்கள்  செய்து இருந்தால் இன்று இந்தியா வேறு மாதிரி இருக்கும் அல்லவா ?

காந்தி: ஓ  அப்படியா ! இது ஒரு மிக தவறான தகவல் இளைஞரே. வரலாற்று பூர்வமாக எந்த முகாந்திரமும் அற்ற ஒரு செய்தி. எனக்கு தெரிந்த வரை
இப்படி ஒரு குற்றச்சாட்டு, ஜவஹர் உயிரோடு இருந்த வரை யாரும் சொன்னது இல்லை. மிக சமீபமாகத் தான் சிலர் இப்படி விஷமமாக பேசி திரிகின்றனர்.

நெறியாளர்: ஆனால் பாபுஜி சில ஆவணங்கள் உள்ளனவே. அதற்கு என்ன சொல்கிறீர்கள்.

காந்தி: எந்த ஆவணமும் இல்லை. இருக்கவும் முடியாது. இது போலியாக உருவாக்கப்பட்ட ஒன்று. மக்களால் மிக விரும்பப்பட்ட ஒரு தலைவர் அன்றைக்கு ஜவஹர் தான் என்று சர்தார் அவர்களுக்கும்  தெரியும், அதே போல் அன்றைய ஒவ்வொரு காங்கிரஸ்காரர்க்கும் தெரியும். மேலும் இவர்கள் இருவருக்கும் இடையில் உள்ள பதவிக்கான போட்டி என்பது என்னை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டியதில் பங்கேற்ற வலது சாரிகளின் கண்டுபிடிப்பே தவிர வேறு எதுவும் இல்லை.

நெறியாளர் : கவனத்துடன் பேசுங்கள் பாபு அவர்களே. இந்தியாவின் சிறந்த தேச பக்தர்களை நீங்கள் எந்த ஆதாரமும் இன்றி அபாண்டமாக குற்றம்
சொல்கிறீர்கள்.

காந்தி: இந்த வயதான மனிதன் மேல் கோபம் கொள்ள வேண்டாம் இளைஞரே!
நீ எந்த அளவுக்கு வரலாற்றை பற்றி படித்து இருக்கிறாய் என தெரிய வில்லை. "காந்தி போய்  விட்டார். நம்மை இனி யார் வழி நடத்துவார்கள்"  எனும் நூலை படிக்குமாறு உனக்கு நான் பரிந்துரை செய்கிறேன்.நேரு, ராஜேந்திர பிரசாத், மௌலானா ஆசாத், வினோபா, கிருபளானி, ஜெயப்ரகாஷ் நாராயண், காலேல்கர் ஆகியோரது  மார்ச் 1948 -இல் சேவாக்ராமில் நடந்த  ஒரு உரையாடல் அந்த புத்தகத்தில் உள்ளது. சர்தார் படேல் உடல் நலமின்மை காரணத்தால் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வில்லை. அதில் தலைவர்கள்,  இனி இந்த நாட்டை எப்படி வழி நடத்தி செல்வது என்பது குறித்து ஆலோசித்தார்கள். எனக்கு சிறிது நேரம் அனுமதி
அளித்தால் அன்று வினோபா என்னவெல்லாம் கூறினார் என்பதை விளக்கமாக நான் சொல்கிறேன். வினோபா சொல்கிறார்  :- " நான் ஆர் எஸ் எஸ் தோன்றிய மாநிலத்தை சேர்ந்தவன்.  சாதியை நான் துறந்தவன் எனினும் காந்திஜியை கொன்றவன் எனது சாதியை சேர்ந்தவன் என்பதை எப்பொழுதும் நினைவில் வைத்து இருக்கிறேன். ..... நான் பவுனார் என்ற பகுதியில் பல காலமாக வாழ்ந்து வருபவன். அங்கும் மற்றும் நாக்பூர் வார்தா போன்ற இடங்களிலும் காந்தி படுகொலை சதி வழக்கில் நான்கு ஐந்து பேர் கைது செய்யப் பட்டு உள்ளார்கள். இந்த ஆர் எஸ் எஸ் என்ற அமைப்பு இந்தியாவின் பல இடங்களிலும் ஆழமாக பரப்ப பட்டு  நன்றாக வேர் ஊன்றிவிட்டது. அது முழுமையாக பாசிஸ்ட் தன்மை கொண்டு உள்ளதாக
இருக்கிறது. ..... காந்திஜி அவர்களின் கொள்கை சத்தியம் என்றால் ஆர் எஸ் எஸ்ஸின்  கொள்கை அசத்தியம். பொய்களே அதன் தத்துவம் ஆகவும் தந்திரம் ஆகவும் இருக்கிறது.

 ஆர் எஸ் எஸ் செயல்படும் முறை எப்படி எனில் எப்போதும் நமக்கு
 (காங்கிரஸ்) நேர் எதிரான நிலை பாட்டை எடுப்பது. விடுதலை போரில் நாம் ஜெயிலை நிரப்பி கொண்டு இருந்தால் அவர்கள்  ராணுவத்திலும் போலீசிலும்
சேர்ந்து கொண்டு நமது போராட்டங்களை முறிபடிக்க செய்வார்கள். எங்கெல்லாம் இந்து முஸ்லீம் பிரச்சனைகள் உள்ளதோ அங்கே சென்று மேலும் அதை ஊதி பெரிதாக்கி குழப்பம் செய்வார்கள். அன்றைய பிரிட்டிஷ் அரசு நம்மை பிரித்து ஆள்வதற்காக அவர்களை ஊக்குவித்து வளர்த்தது. அதன் விளைவாக பெரும் தொல்லைகளை இந்த நாடு  இப்பொழுது சந்தித்து கொண்டு இருக்கிறது".

நெறியாளர்: இவையெல்லாம் வினோபா என்ற தனி மனிதரின் கருத்து அல்லவா! ஆர் எஸ் எஸிற்கு எதிராக எதுவும் இதுவரை நிரூபணம் செய்யப்
படவில்லை என்பது தானே உண்மை.  அது ஒரு புறம் இருக்கட்டும். சுபாஷ் சந்திரா போஸ் பற்றி சொல்லுங்கள். நேரு அவரை ஏன் அப்படி வெறுக்க வேண்டும்?

காந்தி: நான் உனக்கு  ரகசியம் சொல்கிறேன் இளைஞனே! ஜவஹருக்கும் சுபாசுக்கும் கருத்து மாறுபாடுகள் என பெரிதாக ஒன்றும் இல்லை. என்னிடத்தில் தான் சுபாஷ் கருத்து வேறுபாடு கொண்டு இருந்தார். எளிதில் உணர்ச்சி வயப்படும் வங்காள மன நிலை தான்
சுபாஷிடம் இருந்த சிக்கல். THY HAND GREAT ANARCH என்ற Nirad C. Chouduri
யின் நூலை படித்து பார்த்தால் உனக்கு இது நன்றாக புரியும். அவர் என்னை பற்றி நல்ல விதமாக அந்த புத்தகத்தில் எழுதா விட்டாலும் , நேருவிற்கு சுபாஷிடம் எந்த பிணக்கும் இல்லை என தெளிவாக சொல்கிறார். சுபாஷ் திருப்பூரி காங்கிரஸ் மாநாட்டில் (1939) என்னோடு (காந்தி) சேர்ந்து கொண்டு அவருக்கு எதிராக வேலை செய்தனர் என நேருவிடமும் சர்தார் படேலிடமும்
எரிச்சல் அடைந்து இருந்தார்.

காந்தி: நான் தொடர்ந்து பேசலாமா? நன்றி....  எல்லோரும் போஸுடைய  மார்ச் 28 1939 கடிதத்தை பற்றி குறிப்பிட்டு அதில் போஸ் ஐவகருக்கு என் மேல் பெரிய அளவில் வெறுப்பு உள்ளது என்று சொல்லி இருப்பதை சுட்டுகிறார்கள். எந்த சூழ்நிலையில் போஸ் அவ்வாறு சொல்கிறார் என நீராட் பாபுவின் புத்தகத்தில் உள்ளது. அவர்களுக்குள் எந்த அளவு கண்ணியமான உறவு இருந்தது என்பதை  நீராட் குறிப்பிடுகிறார். சிறிய கருத்து மாறுபாடுகள் பின்னாளில் பூதாகாரம் ஆக்கப்பட்டது.

நெறியாளர்:  காந்தி அவர்களே, நீங்கள் எதற்க்காக நேருவை விட்டு கொடுக்காமல் பேசுகிறீர்கள்.

காந்தி:  நீ ஒரு சுத்த ஊமையாகவோ காது கேளாதவனாகவோ அல்லது வடிகட்டிய முட்டாளாகவோ இருக்கிறாய். இன்று இந்தியாவில் நடப்பது
பழைய பிரிட்டிஷ் காலத்திய பிரித்தாளும் தந்திரத்தின் மறுவடிவம் தான் என்பதை நீ புரிந்து கொள்வாய் என நான் நினைத்து விட்டேன். அன்றைய
விடுதலை போராட்ட கால மூத்த தலைவர்களிடையே பிணக்குகள் ஏதும்
இல்லை. பல விஷயங்களில் கருத்து மாறுபாடுகள் இருந்தன. போட்டிகள்
கூட இருந்து இருக்கலாம். விரோதப் போக்கு நிச்சயம் இருந்ததே இல்லை.
நமது போராட்ட கால வரலாறு இப்படி தெளிவாக இருக்கையில் ஏன் இப்பொழுது திரித்து சொல்லப்படுகிறது என்பது எனக்கு நன்றாக விளங்கி கொள்ள முடிகிறது.

ஜவகருக்கு படேலுடன் விரோதம் இருந்தது, போசுடன் பகை இருந்தது அம்பேத்காரிடம் அவர் விரோதப் போக்கு கொண்டு இருந்தார் என்றெல்லாம் அவதூறு பரப்பி அவர் பெயருக்கு களங்கம் விளைவிப்பதை இந்த கூட்டம் நோக்கமாக வைத்து இருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.  பத்து
வருடம் முன்பு வரை அம்பேத்கரை கடுமையாக சாடி கொண்டிருந்த இவர்கள் அவர் மீது இப்பொழுது அரசியல் காரணத்திற்காக பாச மழை பொழியத்   தொடங்கி இருக்கிறார்கள். ஜவகர் மீதான அவதூறு பிரச்சாரத்தை
அவர் நற்பெயரை பாதாளத்திற்கு கொண்டு வந்த பின் முடித்து விட்டு
அடுத்த இலக்காக என்னை பற்றி மிக அப்பட்டமான பொய் பிரச்சாரத்தை ஆரம்பிப்பார்கள். இதை நீ குறித்து வைத்து கொள். நடக்க போகிறது.
          நேர்காணல் இப்போதைக்கு நிறைவுறுகிறது. நன்றி.

        

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்