amma vanthaal in today's context

தி ஜா வின் அம்மா வந்தாள் புதினமும் இன்றைய நெறி/மரபு மீறல்களும் 

           சமீபத்தில் தி ஜானகிராமனின் "அம்மா வந்தாள்" படித்தேன். அறுபதுகளில் இப்படிப்பட்ட கருவை கொண்டு ஒரு நாவல் எழுத முடிந்தது என்பது ஒரு ஆச்சர்யமான ஒன்றாக இருந்தது. மிகப் பெரிய சர்ச்சைகள் இருந்ததாக தகவல்கள் இல்லை. வேதம் படிக்கின்ற, வேதம் பற்றிய விளக்கங்கள் கொடுக்கும் ஒருவரின் குடும்பத்தை பற்றிய நெறி பிறழ்வுகள் 
பற்றிய கதை அமைப்பு.  இன்றைய தினம் கூட எழுதுபவர்கள் தொட தயங்கும் ஒரு விஷயத்தை எந்த ஒரு ஆபாசமோ, அதிர்ச்சியையோ  படிப்பவர்க்கு கொடுக்காமல் தி ஜா நாவலை வடிவமைத்து இருக்கிறார். படிக்கும் போது 
படிப்பவர் மனம் சமூக மரபை உடைப்பவர் பக்கம் சாயும் போது,  ஆசிரியர் நிச்சயம் வெற்றி பெற்று விட்டார் என்று சொல்ல வேண்டும். கதையை அம்பது வருடம் கழித்து படிக்கும் எனக்கு பெரிய அதிர்ச்சிகள் இல்லா விட்டாலும், இந்த மாதிரி ஒரு சிந்தனை தி ஜா அவர்களுக்கு ஏன் வந்தது என்பதை யோசிக்க தோன்றியது.  வணிக ரீதியான கூடுதல் சுவாரஸ்யத்திற்கு என்று எடுத்து கொண்டாலும், அதற்கு அவ்வளவு பெரிய ரிஸ்க் அவர் எடுத்திருக்க வேண்டுமா என்ற ஒரு கேள்வியும் எழுகிறது. இத்தனை ஆண்டுகள் கழித்து படிக்கும் என்னை போன்ற ஒருவருக்கு கூட,மிகுந்த சுவாரஸ்யமாகவே நாவல் இருந்தது. தொடர்ந்து இரண்டே தினங்களில் படித்து விட்டேன். நெறி மீறல்கள்/மரபு தாண்டிய கருக்கள் எப்போதுமே ஒரு அதிர்வை ஏற்படுத்துகின்றன. ஆங்கிலத்தில் டி ஹெச் லாரென்ஸ் போன்றவர்களை பின்பற்றி சற்றே சமூகத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தலாம் என்று கூட இப்படி எழுதி இருப்பார் போல. 

          மாதொருபாகன் எழுதி விட்டு, பெருமாள் முருகனுக்கு ஏற்பட்ட கதியை பார்த்த எனக்கு, அன்றைக்கு மிக சர்ச்சைக்கு உரிய கருவை கொண்ட ஒரு கதை எழுதிய பின்னர் நடந்த சில சம்பவங்களுடன் ஒப்பிட்டு பார்க்க தோன்றியது. அன்றைய தினத்தில், தி ஜா அவர்களுக்கு இந்த கதைக்காக எதிர்ப்பு தெரிவித்த அவரது சொந்த ஊர் பிராமணர்கள், சில காலம் சொந்த ஊருக்கு வர விடாமல் பகிஸ்கரிப்புக்கு அவரை உள்ளாக்கினர். அவ்வளவு தான். இந்த விஷயத்தை நீடாமங்கலத்தை சேர்ந்த ஒரு நண்பர் கூறினார். அது எந்த அளவிற்கு தி ஜா வை பாதித்தது என பார்த்தால், பெரியதாக ஒன்றும் இருந்திருக்க முடியாது என்றே தோன்றுகிறது . தி ஜா வெளி ஊர்களில்/மாநிலங்களில்  வசித்துக் கொண்டிருந்தார் என்பது அவருக்கு ஒரு வசதியாக இருந்திருக்கும் . பெருமாள் முருகன் திருச்செங்கோட்டில் இருக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. தமிழ் நாட்டில் அன்று (60 களில் ) பிராமணர்கள் செல்வாக்குடன் இருந்தாலும், பெருமாள் முருகன் அளவிற்கு பெரிய சர்ச்சை ஏதும் நிகழவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.  

           லிவிங் டுகெதர், polyamory, multiple commitment என்றெல்லாம் இன்று நகர் வாழ் மக்களின் பிரயோகத்தில் வந்து விட்ட சூழலில் கூட(though only as exceptions) அம்மா வந்தாள் 'அலங்காரம்', 'இந்து'  இன்றும் கூட நம் ஊரில்  ஒரு விதிவிலக்காக மட்டும் இருக்க முடியுமே தவிர பொதுவாக சமுதாயம் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக  இருக்க முடியாது. நான் கேள்வி பட்ட வரையில் , கணவனிடம் திருப்தி அடையாமல் "வெளியே" சென்ற  மனைவியை கணவன் ஒரு  கட்டத்தில் வீட்டை விட்டே விரட்டியதையும், ஒரே வீட்டில் இருவருமாக, மனைவி ஒரு புறம் 'கள்ள' காதலன் உடனும் , கணவன் குழந்தையுடன் தனியாகவும்  ஒரே  வீட்டிலும் வசிப்பதையும் பற்றி "புரளி"களாக கேள்வி பட்டு  இருக்கிறேன். ஆனால் அவையெல்லாம் சமீபத்திய நிகழ்வுகள். இந்த மாதிரி நெறி  மீறல்கள் எல்லா காலத்திலும் இருந்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது . After all, மனிதனால் சமுதாய ஒழுங்கிற்காக ஏற்படுத்த பட்டது தானே இந்த குடும்ப மரபுகள் எல்லாம்..             ஹிந்து ஆங்கில பத்திரிகை யின் Metro edition page  polyamorus  பற்றிய கட்டுரை ஒன்றில் இளம் பெண் ஒருவர் சொல்கிறார்,  ஒரே பார்ட்னர் என்பது ஒடுக்குவதாக இருக்கிறது என்றும் , தான் polyamorous ஆக இருப்பது தான் இயற்கையானது எனவும் சொல்கிறார்.  இது ஒரு வகை பெண்ணீய சுதந்திரம் என்று அந்த கட்டுரையாளர்  (freelance writer jayanthi madhukar  ) குறிப்பிடுகிறார்."feminist way of living your life"

            மேற்கில் மட்டும் இல்லாமல் இந்தியா போன்ற நாடுகளின் நகர நாகரிகத்திற்கும் இது போன்ற "நவீன"மான சிந்தனைகள் வந்து கொண்டு இருப்பதை தான் ஹிந்து போன்ற கட்டுப்பெட்டித்தனமான பத்திரிக்கைகளில் கூட polyamoruous அல்லது multiple relationships பற்றி சகஜமாக கட்டுரைகள் வருவது காண்பிக்கிறது. ஹிண்டுவின் மற்றோரு சுவாரஸ்யமான கட்டுரை
ஒன்றுக்கு மேற்பட்ட துணைவர்களை (multiple partners) பற்றி விவாதிக்கிறது.         
(shrinking universe - vijay nagaswami ) இந்த நவீன உலகிற்கு ஏற்ப புதிய புதிய சொற்களையெல்லாம் போட்டு இந்த வகை உறவுகள் நியாயப் படுத்த படுவது என்பது சில "உயர் நாகரீக" இடங்களில் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. 

            இன்றைய சமூகத்தின் மேல் மட்ட அமைப்பு என்பது அரசு மற்றும் தேசம் என்றால் அதன் கீழ் அடுக்காக குடும்பம் என்ற அலகு இருக்கிறது. சமுதாய முழு சுதந்திரம் என்பது அரசு என்ற அமைப்பே இல்லாமல் இருக்கும் போது தான் என அரசின்மை வாதிகள் சொல்வார்கள். மேல் அலகில் கட்டுப்பாடின்மை என்பது முழு சுதந்திரமாக கருத படுவது போல், சமுதாயத்தின் கீழ் அலகாக உள்ள குடும்பங்களுக்கும் உறுப்பினர்கள்  கட்டுப்பாடு எதுவும் இல்லாமல் இருப்பது தான் உண்மையான சுதந்திரம் என கருத பட நியாயங்கள் உண்டு. இன்றைய குடும்ப அமைப்பே மகிழ்ச்சியின்மைக்கு காரணமாக உள்ளது என ஓஷோ விலிருந்து பெரியார், லெனின் வரை சொல்லி இருக்கிறார்கள். ஆன்மிக ஞானி என்று சொல்ல படுபவரும், நாத்திகரும், கம்யூனிஸ்டும் ஒப்பு கொள்ளும் கருத்தாக இது உள்ளது. மற்ற விஷயங்களில் எல்லாம் வேறுபடும் இந்த மனிதர்கள் பெண் சுதந்திரம் பற்றியும், குடும்பங்களின் ஒடுக்கும் (constriction) தன்மை, முக்கியமாக பெண் ஒடுக்கு முறை பற்றி ஒத்த கருத்துடன் இருக்கிறார்கள்.  
           அன்றைய சோவியத் யூனியனின் ஆரம்ப கட்டங்களில் லெனின் மற்றும் அவரது சிஷ்யர்கள் திருமணம் என்பது அடிமை தனத்தின் முதல் சின்னம் எனவும், அதை ஒழித்து கட்ட வேண்டும் எனவும், அதற்கு பதிலாக அன்பின் அடிப்படையில்  loose ஆன ஒரு comradeship இருக்கலாம் என்றும் அவர்கள் கருதினார்கள். ரஷ்யா வில் அன்று இருந்த பெண்கள் தான் அதற்கு எல்லாம் ஒத்து வரவில்லை. ஆனால் கம்யூனிஸ்ட்களால் தான் திருமண பந்தத்தை முறிக்கும் முறை டிவோர்ஸ் என்பது முதன் முதலாக (மேற்குலகில்) 1920 -ல் நடைமுறைக்கு வந்தது. பெண்களை குடும்பங்களில் இருந்து பிரித்தால் தான் அரசியலுக்கு அவர்கள் வருவார்கள் என்ற காரணத்திற்காக அவ்வாறு கம்யூனிஸ்டுகள் முயற்சி செய்ததாக குற்றச்சாட்டு இருந்தாலும் அது வரை சட்ட பூர்வமாக உலகில் டிவோர்ஸ் எங்கும் நடைமுறையில் இல்லை என்பது தான் உண்மை. அதன் விளைவாகவோ என்னவோ,  உலகில் அதிக விவாக ரத்தும் (100 க்கு 54) அபார்ஷனும் (50 per live births) ரஷ்யாவில் தான் இருக்கிறது.             

இந்த கருத்துக்களை படிக்கும் சிலர் இன்றும் கூட முக சுளிப்புடன்  தான் படிக்க வாய்ப்பு இருக்கிறது. ஓஷோ சொன்னதாக குடும்பம் பற்றி ஒரு conservative ஆக உள்ள நண்பரிடம் பேசும் பொழுது, அவர் மிக கோபமாக இந்த மாதிரி விஷ(ய) த்தை எல்லாம் என்னிடம் பேசாதீர்கள் என்று சொல்லி விட்டார். Taboo பொருளாக தான் mainstream இல் இது இன்றும் இருக்கிறது என்பது தெளிவு. 
அப்படியெனில் தமிழில் 1960 களில் காமத்திற்காக குடும்ப நெறிமுறை மீறலை கருவாக கொண்டு ஒரு புனைவு என்பது ஒரு புரட்சிகரமான நிகழ்வு என்றே கூற வேண்டும். அதிலும் most கான்செர்வ்டிவ் வேத விற்பன்னர் குடும்ப மத்தியில் அதை வைத்தது என்பது பல மடங்கு துணிச்சலான ஒரு செயல்.  


          


              

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்