இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் - ஒரு தொகுப்புப் பார்வை

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் - ஒரு தொகுப்புப்  பார்வை 


        திரு ஜெயமோகன் அவர்களின் இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் என்ற நூலை இரண்டாவது முறையாக படித்தேன். இந்திய தரிசனங்கள் பற்றி அறிய விரும்புவர்களுக்கு நிச்சயமாக ஒரு ஆரம்ப  படி நிலை புத்தகமாக அது இருக்கிறது. எந்தத்  தத்துவ அறிமுகமும்  இல்லாதவர்கள் கூட ஓரளவு எளிதாக புரிந்து கொள்ளும் வண்ணம்  நல்ல தமிழில் சிறப்பாக எழுதப் பட்டு உள்ள ஒரு நூல். இதை முதல் முறை வாங்கி படித்து விட்டு வேறொரு நண்பருக்கு பரிசாக கொடுத்த பிறகு, நாம் சரியாக உள் வாங்க வில்லையோ என்ற ஐயத்திலும், நாம் சுருங்க தொகுத்து  கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலும் மீண்டும் ஒரு முறை படித்தேன். பிறிதொரு வாசிப்பிற்கான தேவை இருக்கக் கூடாது என்பதற்காக இந்த கட்டுரையை முயற்சி செய்கிறேன். முக்கிய சில பாகங்களை மட்டும் (என்னுடைய பார்வையில்) இங்கே சுருக்கமாகத் தர முயற்சி செய்து இருக்கிறேன்.

முன்னுரை 

        நூலின் ஆரம்ப உரையிலேயே ஆசிரியர், இந்து ஞான மரபு என்பது அதன பன்மைத்  தன்மை வழியிலே இயங்குகிறது, எண்ணற்ற மாற்று வழிகளை அது திறந்து வைத்து கொண்டே  இருக்கிறது என்று குறிப்பிடுகிறார். ஆன்மிகம், பௌதிக வாதம், இறை மறுப்பு வாதம் முதலிய பல கூறுகளும் அதில் விவாதிக்க பட்டு வந்து கொண்டு   இருப்பதாகவும்  சொல்கிறார். தலைப்பாக ஏன் இந்திய ஞானம் என்று பயன் படுத்தவில்லை என்பதற்கு, இந்திய மரபு என்றால் அதில் பௌத்த சமண ஆசீவகம் தவிர பல வித இஸ்லாமிய கிருத்தவ சிந்தனைகளையும் உள்ளடக்க வேண்டியிருக்கும். அது மட்டும் இன்றி இந்திய மார்க்சிய மரபில் கூட இந்திய ஞான மரபு கொஞ்சம் இருக்கும். ஆகவே அதையும் இணைக்க வேண்டியிருக்கும் என்பதாக விளக்கம் அளிக்கப்  படுகிறது. தவிர இந்து ஞான மரபு  என்பது ஆன்மிகம் மட்டுமே என அறிவு சூழலில் தவறாக விளங்கி கொள்ள பட்டு இருக்கிறது. இந்து மரபானது ஆன்மிகம், அதன் சடங்குகள் தவிர வேறொன்றும்  இல்லை என சொல்லும் தரப்பை மறுப்பதாகவும் இந்நூல் இருப்பதை வாசகர்கள் உணர முடியும்.  , மேலும்  இதை தன்னுடைய முதல் தத்துவ நூல் என்றும், நாராயண குருவும் நடராஜ குருவும் நித்ய சைதன்ய பதியும் வளர்த்து எடுத்த சிந்தனையின் தொடர்ச்சியாகவும் உள்ளது என்றும் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

          இந்த நூலுக்கு நீண்ட அணிந்துரை எழுதி உள்ள ஆசிரியரின் நண்பர் திரு சோதிப்பிரகாசம் வரலாற்று அறிஞர்கள் தேவி பிரசாத் சட்டோபாத்யாயை, கோசாம்பி ஆகியோரை விட கருத்து தெளிவில் இந்த நூல் சிறந்து விளங்குவதாக புகழ்கிறார்.

நூலில் உள்ள சில  வரையறைகள் (Definitions )

           மெய் ஞான மரபு:என்பது நம்பிக்கைகளின் தொகுப்பு அல்ல. அது தரிசனங்களின்  வரிசை..
           தரிசனம் என்பது வாழ்க்கை மற்றும் பிரபஞ்சம் குறித்த ஒட்டு மொத்த பார்வையாக இருக்க வேண்டும்...
           மெய்ஞான மரபில் தத்துவமும் உள்ளடங்கி உள்ளது.
           சத்வ ரஜோ தமோ என்ற மூன்றும் வெறும் குணங்கள் மட்டும் அல்ல, நேர் எதிர் மற்றும் நடு எனும் முரண் இயக்கங்கள்.

            பூர்வ மீமாம்சை = மொழி இலக்கணம் , உத்தர மீமாம்சை -= வேதாந்தம்          
காலாவதி ஆகா தத்துவங்கள்

            மனிதனின் சிந்தனையில் எழும் எதுவும் பிறிதொன்றின் தொடர்ச்சியில் மட்டுமே எழ முடியும். இந்தியாவில் மட்டுமே புராதன சிந்தனைகள் இழிவு படுத்தப் பட்டு புறக்கணிக்க படுகிறது. மேற்கில் அறிவு சூழலில் எந்த ஒரு சிந்தனையும் ஒதுக்கப் படாமல் வேறு வேறு கோணங்களில் வாசிக்கப் பட்டு கொண்டே இருக்கிறது. இந்திய சிந்தனை மரபுகள்  அனைத்தும் காலாவதியானது என சொல்லி வருபவர்கள் (பெரியாரீயர்கள உள்பட) வெறும் "சிந்தனை இறக்கு மதியாளர்"களாக இருக்கிறார்கள். இவர்கள் இந்திய மட்டும் அல்ல, எந்த சிந்தனை குறித்தும் ஆழமாக எதுவும் எழுதியது இல்லை. . இந்திய சமூகத்தை புரிந்து கொள்ள அதன் மரபை பற்றி அறிவது மிக மிக அவசியம்..

தத்துவமும் சிந்தனையும் 

           நாம் சிந்திப்பது எல்லாம் தர்க்கம் மூலம் தான். தத்துவத்தில் தான் அனைவரும் வாழ்கிறோம். அது மூச்சு போல உள்ளது. எனவே அதை யாரும் தவிர்த்து விட முடியாது. மேலும் சிந்தனை என்பது சுவாசம் என்றால் தத்துவ சிந்தனை என்பது பிராணாயாமம் ..

இந்து மத மெய்ஞ்ஞானப் பிரிவுகள் - தரிசனம்  

           ஆறு வழிபாட்டு முறைகளின் ஒரு ஒட்டு மொத்தமான தொகுப்பு தான்  இந்து மதம். சைவம், வைணவம், சாக்தேயம், கௌமாரம், காணபத்யம், சௌரம் ஆகியவை அவை. இந்து தத்துவ மரபு தான் இந்து மெய்ஞான மரபு என்று சிலர் குறிப்பிடுகிறார்கள். ஆனால் தர்க்க பூர்வமான விஷயங்கள் மட்டுமே தத்துவத்தின் எல்லைக்குள் வர முடியும். தத்துவம் ஓர் எல்லை வரை மட்டுமே செல்லும். ஆனால் தரிசனங்களில் தர்க்கத்துக்கு அப்பாற்பட்டவையே அதிகம் என்று சொல்லலாம். .
ஒரு குறிப்பிட்ட அறிவுத் துறையில் உருவான ஒரு கருத்து அத்துறைக்கு அப்பால் உள்ளவற்றயையும் சித்தாந்தம் ஆக விரிந்து விளக்க முற்படுபவையாக ஆகும் போது அது தரிசனம் ஆகிறது. 

        மதம் என்பது ஒரு தரிசனமும் வழிபாட்டு முறையும் இணைந்த ஒன்று. மதங்களாக  வளராத தரிசனங்களை தரிசனம் என கூறுகிறோம்.நமது தேசத்தில் அவ்வாறு வளராத ஆறு தரிசனங்கள் காலத்தால் மிக பழையதும் அடிப்ப்டையானதும் ஆகும். அவை சாங்கியம், யோகம், வைசேஷிகம், நியாயம், பூர்வ மீமாம்சம், உத்தர மீமாம்சம் என்பவை... 

        பல்வேறு வழி பாட்டு முறைகளும் ஆதி தரிசனங்களும் கலந்து உரையாடி உருவானவையே தரிசனங்கள். இந்திய ஞான  மரபு என்ற மரத்தின் கனிகள் அவை. எந்த வேரின் சாரம் எந்த பழத்தின் சாறாக மாறியது என பார்ப்பது வீணர்கள் வேலை. ஆறு தரிசனங்களும் ஒன்றை ஒன்று மறுப்பவை அல்ல. ஒன்றையொன்று நிரப்புபவை என கூறுபவர்கள் உண்டு. ஆறையும்  மூன்றாக தொகுத்து. சாங்கியத்தில் யோகம்,.வைசேஷிகத்தில் நியாயம் , வேதாந்தம் என்ற வட்டத்திற்குள் இரு மீமாம்சைகள்  எனவும் உள்ளடக்கலாம். இந்தத் தரிசனங்கள் அனைத்தும் தனித்தனியே செயல் பட முடியாத படி பின்னி பிணைந்து விட்டன. 

சாங்கியம்
               இவற்றில்  காலத்தால் முற்பட்ட சாங்கியத்தின் செல்வாக்கு இல்லாத இந்திய அறிவுத் துறையே இல்லை என்று கூறலாம். இதை ஆதி இயற்கை வாதம் எனவும் கூறலாம். பொருள் ஒவ்வொன்றிலும் முக்குணங்கள் போர் புரியும் நிலையில் உள்ளன(சத்வ-goodness,harmonious, ரஜோ-active, confused  
தமோ-darkness destructive ). எதிர் எதிர் குணங்கள் புணர்ந்து புதிதாக பிறந்து முன் நகர்கின்றன என்று சாங்கியம் சொல்கிறது. இது மேற்கத்திய மரபில் உள்ள முரண்பாட்டியக்கம் (dialectics )  என்ற கருத்தோடு ஒத்து இருக்கிறது.நமது மரபிலும் இதே போல மூன்று சக்திகளில் ஆன முரண்பாட்டு இயக்கம் பேசப்பட்டு உள்ளது..  

             பிரபஞ்சம் நான்கு பூதங்களால் ஆனது, அதன் இயக்கத்தில் ஆன்மிகம் ஆன சாராம்சம் ஏதும் இல்லை என சாங்கியம் கருதியது . பிரக்ஞை என்பதும் பருப்பொருளில் இருந்தே உருவாகி வந்தது எனவும் கூறியது. ஜடத்தில் இருந்து உயிர், பிரக்ஞை எப்படி உருவாக முடியம் என்பதற்கு விடையாக புருஷ தத்துவத்தை பின்னர் சாங்கியம் எடுத்து கொண்டது.. 

           வேதாந்தம் கூறும் பிரபஞ்ச உயிரையே  சாங்கியம் புருஷனின் முக்குணங்களாக சொல்வதாக தர்க்கம் மூலம் நிரூபித்து அதை வேதாந்தம் விழுங்கி கொண்டதாக கருத இடம் இருக்கிறது. இந்து ஞான மரபில் வைதீகம் 
மைய இடத்தில இருந்தது எவ்வளவு உண்மையோ அந்த அளவிற்கு உண்மை அது எக்காலத்திலும் ஒற்றை பெரும் சக்தியாக இல்லை .இடது சாரி பார்வை உள்ள சிந்தனையாளர்கள் தங்கள் அரசியல் நோக்கத்திற்கு தத்துவப் பார்வையை கற்பிதம் செய்யும் போக்கு இருக்கிறது.. வைதீக தரப்பு லோகாயத தரப்பை அழித்து இருக்க வாய்ப்பு இல்லை . அது உள் நோக்கம் கொண்ட குற்றச்சாட்டாகவே கருத வேண்டும். லோகாயதம் (இயற்கை வாதம் அல்லது நாத்திக தரப்பு ) அழிந்ததற்கான காரணம் மதமாக, வழிபாடாக மாற கூடிய தன்மை அதற்கு இல்லாததாலும் , எதிர் மறை தன்மையாலும்  அழிய நேரிட்டு இருக்கும்.

கீதையும்  சாங்கியமும் 

           சாங்கியத் தத்துவத்தின் சித்திரத்தை மிக விரிவாக தரும் நூல் பகவத் கீதை.. சாங்கியம் என்றாலே கீதையில் உள்ள சாங்கிய யோகம் தான் நினைவுக்கு வரும் அளவுக்கு அதில் சற்று உருமாறிய நிலையில் விரிவாக பேசப் படுகிறது. பல நூறு ஆண்டுகளாக வேத மரபு, வேதாந்தம், பௌதிக வாத ஞான மரபுகள், பௌத்த சமண மதங்கள் ஆகியவற்றுக்கு இடையே நடந்த பெரும் விவாதம் உருத்திரண்டு வந்ததே கீதை. கீதையின் சாரம் ஆன்மிகம் என்றாலும் அது சடங்குகளுக்கும் , மூட நம்பிக்கைகளுக்கும்  எதிரானது.
 ஆன்மிக விடுதலையே அதன் அறைகூவல் என்றாலும் அது பௌதிக வாழ்விலிருந்து  தப்பித்து ஓடுவதை ஏற்கவில்லை. தத்துவ நூலாகவும், மிகுந்த அழகியல் நுட்பம் உடைய ஒரு பேரிலக்கியமாகவும் கீதை உள்ளது..   
  
யோக மரபு 

        சாங்கியத்தின் கிளையாக யோகம் வளர்ந்தது. சாங்கிய மரபில் உள்ள புருஷ தத்துவமே யோகம் உருவாக வழி செய்தது என்பது சிலரது கருத்தாக உள்ளது. பிரபஞ்சம் குறித்து இரண்டும் ஒரே கருத்தை கொண்டு இருந்தாலும், அதை அறியும் முறையில் வேறு வேறாக மாறி விடுகின்றன. யோகம் இந்து ஞான மரபு எல்லா தரப்பிலும் இடம் பெறுகிறது. இந்தியாவிற்கு வந்த எல்லா மதங்களிலும் யோகத்தின் பாதிப்பை காணலாம்.. 

        யோகம் ஒரு மத வழி முறை அல்ல. இறைவன், பிரம்மம் முதலியவை இதில் இல்லை. ஒரு மனப் பயிற்சி மட்டுமே. ஒரு கறாரான விஞ்ஞானம் என பழைய நூல்கள் யோகத்தை சொல்கின்றன. அடிப்படையில் இது ஒரு பௌதீக அணுகுமுறையாக இருந்து  பிற்பாடு அதை ஆன்மீக மரபுகள் தேவைக்கு ஏற்ற வகையில் உள்வாங்கி கொண்டன. இன்று நாம் அறியும் யோகம் ஆன்மீக வாத தரிசனமாகவே உள்ள  பயிற்சி முறையாக இருப்பதை காண்கிறோம்.
கடவுள் நம்பிக்கையை ஒரு முழு முதல் இலக்காக யோகம் ஏற்கவில்லை என ரிச்சர்ட் கோர்பே , Dr ராதாகிருஷ்ணன் போன்றோர் குறிப்பிட்டு உள்ளார்கள். யோக மரபின் பெரும்பாலானவற்றை கீதை கையாள்வதை காண முடியும். அது யோகி என்ற கருத்தை விரிவாக எடுத்து சொல்கிறது. யோகங்களில் ஹட யோகம், ராஜ யோகம், கர்ம யோகம், பக்தி யோகம் என்ற நான்கும் முக்கியமாகும். இது நாள் வரை இந்த மரபு வளர்ந்த படியே தான் உள்ளது.

வைசேஷிகம் மற்றும் நியாய மரபுகள் 

          இயற்கை பொருட்களை  தொகுத்துப் பார்த்து  ஆதி இயற்கை என்ற பெரும் பொது வடிவத்தை சாங்கியம் சொல்லியது போல பகுத்து பகுத்து 
கடைசியில் மிஞ்சும் அணுவை கற்பிதம் செய்தது வைசேஷிகம். மூல குரு கணாத ரிஷி. முக்கிய நூல் பிரசஸ்தபாதர் எழுதிய பதார்த்த தர்ம சங்கிரகம். 
இதுவும் ஒரு ஆதி பௌதீகவாத தரிசனம். ஏனெனில் பருப் பொருளையே 
பிரபஞ்சத்தின் ஆதியாக காண்கிறது. மற்ற பௌதிக தரிசனங்களில் இருந்து ஆத்மா என்பது ஒரு திரவியம் என்று சொல்வதில் இது வேறுபட்டு நிற்கிறது.
நியாயம் என்ற தரிசனம் வைசேஷிகத்தின் துணை தரிசனம். இந்திய மரபின் தருக்க முறை தான் நியாயம். கோதமர் அல்லது கௌதமர் இதன் ஸ்தாபகர். 
இதுவும் பிரபஞ்சம் அணுக்களால் ஆனது என நம்பியது. சிருஷ்டிக்கும் ஒரு -- வனுக்கு இதில் இடமில்லை. ஆனால் பிற்பாடு இந்த மரபினை வேதாந்தத்துடன் பிணைத்து பிரம்மமும் உண்டு என சேர்த்துக் கொண்டனர்.
அனைத்து தரிசனங்களும் உண்மையை அறிவதும் முன் வைப்பதும் நியாயத்தை பயன் படுத்தியே என்பதை காண முடிகிறது. நியாய சாஸ்திரத்தில் கடவுள் இல்லை. இருந்தாலும் அவரும்  ஒரு விவாத பொருளாக மட்டுமே எடுத்துக் கொள்ள படுகிறார். 

பூர்வ மீமாம்சை 

               இந்து மதங்களில் எதற்கும் மூல நூல்கள் இல்லை என்றாலும்  அதில் பூர்வ மீமாம்சை என்ற ஒரே ஒரு மரபிற்கு மட்டுமே மூல நூல்களாக வேதங்கள் கணிக்கப் படுகிறது. வேதங்களை எல்லா மரபிற்கும் தத்துவங்களுக்கும் அடிப்படையாக ஆக்கும் போக்கு பல நூற்றாண்டுகளாகவே நடந்து வருவதாகும். வேதங்களை அணுகும் ஒருவர் மனித குலத்திற்கு சொந்தமான மாபெரும் கவிதை தொகுப்பு, மெய் தரிசனங்களின் தொகை என்று அதனை கூறலாம்.
சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம் ஆகிய பௌதிக வாத அடிப்படை மரபுகளை எல்லாம் மிக நுட்பமாக புரோகித மரபு ஆன்மிக அடிப்படை நோக்கி நகர்த்தி மெல்ல மெல்ல வைதீகமாக்கியது எனலாம். உதாரணத்துக்கு 
தூய அறிவு வாதமாக உள்ள அத்வைதமே கூட பரவலான அங்கீகாரத்திற்காக அதன் மூல குருவால் வேதங்களை ஆதாரமாக காட்டி அதை வைதீகம் நோக்கி நகர்த்தியதை காண முடிகிறது.

                  வேதங்களை மையமாக கொண்டு மூல நூல் வாதத்தை வைக்கும் ஒரே இந்திய ஞானம் பூர்வ மீமாம்சை. மொழி உச்சரிப்பு, இலக்கணம் ஆகியவற்றில் மிக கவனமாக வளர்த்து எடுத்ததால் மொழி இலக்கணமே மீமாம்சை எனலாம். 

                 இன்றைய வைதீக மரபின் ஆயுதம் கடவுள். ஆனால் புரோகித மரபின் அடிப்படை சித்தாந்தங்களான பூர்வ மீமாம்சையிலும் மற்ற வேத மைய மரபுகளிலும் கடவுளுக்கு முக்கிய இடமில்லை என்பது ஆச்சர்யம் 
அளிக்கும் உண்மை. செயல்/விளைவு அல்லது கர்ம(karma) வினையை அடிப்படையாக மீமாம்சை முன் வைக்கிறது. நமது முன் வினையாலேயே 
இன்ப துன்பம் ஏற்படுகிறது எனவும் மறுபிறவி, தலை விதி போன்றவற்றிற்கு மற்ற தரிசனங்களில்  சிறிதும் இடமில்லை. இப்போது இந்து மதத்தின் பொது கருத்தாக இது உள்ளது. இந்த கருத்துக்கள் பௌத்த மதத்தையும் கூட ஊடுருவி இருக்கிறது. இது புரோகித மரபின் வெற்றியாகும்.

                  இன்று ஆன்மீகமாக கருதப் படும் அனைத்தையும் மீமாம்சை எதிர்க்கிறது. கடவுள் இல்லை, ஞானி இல்லை யோகி இல்லை. மனிதனால் அறிய முடியாத எதுவும் பிரபஞ்சத்தில் இல்லை என்று சொன்ன மரபு, இன்று தான் மட்டுமே ஆன்மீக மரபு என்று நிலை நிறுத்தி கொண்டிருக்கிறது. இதற்கான காரணம் பின்னால் எழுதப் பட்ட பல பாஷ்யங்கள் என்று சொன்னாலும் முதல் காரணமாக உள்ள நூல் பகவத் கீதையே. இந்நூலில் தான் எல்லா தரிசன மரபுகளும் சற்று மழுங்க அடிக்க பட்டு ஆன்மீகமாக்கப்  படுகிறது. கர்ம வினையில் மறுபிறவியில் நம்பிக்கை உள்ள ஒருவருக்கு கடவுள் தேவை இல்லை ஞானம் தேவை இல்லை.வேள்விகளில் சடங்குகளில் ஈடுபடும் ஒருவருக்கு யோகம் தியானம் போன்றவை வெற்று பயிற்சிகள் மட்டுமமே.

                  மீமாம்சகர்கள் புரோகிதர்கள் என்பதால் பௌதிக தன்மை கொண்டவர்களாக இருந்தனர். வேதங்களை அமானுடங்கள் என நிறுவுவதிலேயே அவர்கள் ஆய்வு இருந்தது. வேதங்களின் துவக்க கால கட்டத்தில் கடவுள் என்ற வடிவம் இல்லை. பிற்காலத்தில் இது உருவாகி வந்து இருக்கிறது. தனி தெய்வங்கள் அல்லது சிறு தெய்வங்களே முதல் கால கட்டத்தில் பேச பட்டு அவை எல்லைக்கு உட்பட்ட இருப்பு கொண்டவையாக இருந்தது. ரிக் வேதம் பத்தாவது மண்டலத்தில் சிருஷ்டி கீதம் எனும் பகுதியில் தான் பரம் பொருள், பிரம்மம் பற்றிய பாடல் உள்ளது. மொத்த வேதாந்தமும் இந்த பாடலின் நீட்சி எனலாம்.

               மீமாம்சை படி பிரபஞ்சம் இறைவனால் உருவாக்கப் பட்டது அல்ல.
அதற்ககுரிய  செயல் விதி படி சுயமாக உருவானது. இங்கு உள்ள ஒவ்வொன்றும் ( கடவுள உட்பட ) செயல் விளைவுகளுக்கு கட்டுப்பட்டவை.
இதை கர்ம(karma) சித்தாந்தம் எனலாம். 

               இத்தனை முரண்களையும், விசித்திரமான தர்க்கங்களையும் இணைத்து உருவாக்கப் பட்டதே இன்றைக்கு நாம் காணும் புரோகிதர்களை மையமாக கொண்ட இந்து மதம்.இந்த இணைப்பு முழுமையாக நடை பெற சாத்தியம் எதுவும் இல்லை என்பதாலேயே தொடர்ந்து பிரசங்கிகளும் பாஷ்யங்களும் தேவைப் பட்டு கொண்டு இருக்கிறது. 

வேள்விகள், சடங்குகள், இன்றைய இந்து மதம்

              மற்றொரு வியப்பளிக்கும் விஷயம் ஆலய வழி பாட்டு மரபுகள் பற்றியது. ஆலய வழிபாட்டு மரபிற்கும் வேள்வி மரபிற்கும் (புரோகித) தொடர்பு இல்லாத பொழுது அதை வெற்றிகரமாக ஆலய மரபுடன் புரோகிதர்கள் இணைப்பு நடத்தி இருக்கிறார்கள். கி பி ஐந்தாம் நூற்றாண்டு குப்தர்கள் காலத்தில் தான் இத்தகைய இணைப்பு நடந்து இருக்க வேண்டும் என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். ஆலயங்களில் வேள்விகள் சடங்குகள் ஆகம விதி முறைகள் பிறகு உருவாகி வந்தன. ஆலய நிர்மாண ஞானம் என்பது வைதீக மரபுக்கு வெளியே தான் சமீப காலம் வரை இருந்தது. ஆதி வைதீக மரபிற்கு விக்கிரக வழிபாட்டில் ஆர்வம் இருந்தது இல்லை.
               
              வைதீக மதத்தின் பூர்வீகமாக கருதப் படும் மீமாம்சையில் புரோகித மரபின் பல கூறுகள் இல்லை. இகலோகம் மாயை, இறைவனே உண்மை என கூறவில்லை. முக்தி என்ற ஒன்று அதில் பேசப் படவில்லை. இறையனுபவம், பக்தி நிலை என்ற விஷயமெல்லாம் அதில் இல்லை. சடங்குகளை முறை படி செய்து பலன்களை பெறுவது பற்றியே அது பேசியது. இந்த காரணங்களால் தான் கீதையில், கிருஷ்ணர் வேதங்களை இக லோக இச்சைகளை வளர்க்கும் போக்கு எனக் கூறுவதையும் , கணிசமான உபநிடதங்கள் ஏன் வேதங்களை நிராகரிக்கின்றன எனவும் நமக்கு புரிந்து இருக்கும்.

             மீமாம்சையில் சாதகமாக உள்ள ஒரே அம்சம் மொழிக்கு அது ஆற்றிய சேவை மட்டுமே என சொல்ல முடியும்.இந்தியாவின் சாதி முறையை மத தத்துவமாக நிலை நாட்டியவர்கள் மீமாம்சகர்களே. அதனாலேயே தாஸ்குப்தா, ஷேர்பாட்ஸ்கி போன்ற இந்தியவியலாளர்கள் 
இதை பற்றி கசப்புடன் பேசுகிறார்கள் . வேத கால தொடக்கத்தில் எல்லா வர்ணத்தவர்க்கும் இருந்த யாகங்கள் செய்யும உரிமையை மீமாம்சகர்கள் தான் தடுத்ததாக தத்துவ அறிஞர் கே தாமோதரன் குறிப்பிடுகிறார். பிற்காலத்தில் உரையாசிரியர் சபரன், பிரபாகரர், குமரிலர் போன்றோர் மூலமாகவும் பிற உரைகள் மூலமாகவும் பிற மரபுகளையும் 
தூய பௌதீக வாத மரபுகளையும் தன்னுள் பிணைத்து மேலும் இறுக்கி கொண்டு ஒரு பிராமண மதமாக மீமாம்சம் மாறியது. 

              யோகம் தவிர மற்ற தரிசனங்கள் உடைந்து திரிந்து உருமாறிய போது  
இன்றைய தினத்தில் பூர்வ மீமாம்சை மட்டும் புரோகித மதமாக வலுவாக நம்மிடேயே இருக்க காரணமாக இருப்பது மீமாம்சை தவிர மற்ற தரிசனங்கள் தத்துவமாக மட்டுமே செயல் படுகின்றன. அறிவார்ந்த தேடல் உள்ளவர்களிடேயே மட்டும் அவை உரையாட முடியும். யோகம் கூட அவ்வாறே இயங்க முடியும். பூர்வ மீமாம்சை சடங்குகள் சார்ந்து இயங்குவது. 
சடங்குகள் அறிவை ஓரம் தள்ளி, நேரடியாக சென்று ஆழ் மனதுடன் தொடர்பு கொள்பவை. இக் காரணத்தினாலேயே சாதாரண மனிதனை எளிதில் கவருவதாகவும் கவ்வி பிடித்து இருப்பதாகவும் ஆசிரியர் விளக்குகிறார். 
 மேலும் தாந்திரீகம், சைவ மரபின் குறியீடுகள், சடங்குகள் ஆகியவையும் வைதிக மதத்தில் இணைக்கப் பட்டன. பின்னர் ஆலய மரபுகளின் கூறுகளையும் வைதீக மரபோடு வெற்றிகரமாக இணைக்க பட்டு ஒட்டு 
மொத்த இந்து மதமும் வைதீக மதமே என்ற நிலை உருவாக்கப் பட்டது. 

வேதாந்தம்  (உத்தர மீமாம்சை)

            இன்றைய இந்து மதம் எனக் கூறப் படுவதற்கு மையத் தரிசனம் என ஒன்றை சொன்னால் அது வேதாந்தமே என்று சொல்ல வேண்டும். இதுவே இந்து மதத்தின் ஆதாரக் கட்டுமானம் என கூறும் மேற்கத்திய அறிஞர்கள் உண்டு. வேதாந்தம் என்பது ஒற்றை படையான ஒரு அமைப்பு அல்ல. காலம் தோறும் உரு மாறியபடியே இருக்கும் ஒன்று. இதன் மூலமாக உபநிடந்தங்களை சொல்லலாம்.  பாதராயணர் என்பவரை வேதாந்தத்தின் ஆதி குருவாக சொல்லலாம். இவரின் ப்ரம்ம சூத்திரங்கள் என்ற நூல் முக்கிய இலக்கண நூல் ஆகும். உபநிடத தரிசனங்களை தொகுத்து ஒருங்கிணைத்தவர் அவரே. வேதாந்தம் பிரம்மத்தை மையமாக வைத்து பிரபஞ்சத்தை விளக்க முயலும் ஒரு தரிசனம். இதை உத்தர மீமாம்சை என்றும் கூறுவார்கள். ப்ரம்ம மீமாம்சை என்றும் சொல்வார்கள். ஞான மீமாம்சை என்றும்  சிலர் குறிப்பிட்டு இருக்கிறார்கள். இது வேதங்களை   
ஏற்கிறது என்பதே இதற்கும் பூர்வ மீமாம்சைக்கும் உள்ள பெரிய ஒற்றுமை. 
ஆனாலும் வேதங்களில் உள்ள சடங்குகளை இது ஏற்க வில்லை. ஞானத் தேடலை மட்டும் ஏற்கின்றது. வேள்விகளில் ஆர்வம் ஏதும் இது காட்ட வில்லை என்பதை காண்கிறோம். 

          உபநிடதங்களில் பிரம்மத்தை அறியும் விளக்கும் பல பகுதிகள் 
அழகிய கவித்துவமாக வெளிப்பட்டு உள்ளன. கேனம், மாண்டுக்யம், ஈசம், சாந்தோக்யம், பிரகாதரண, தைத்ரீயம் ஆகிய முக்கிய உபநிடதங்களில் பிரம்மத்தை விளக்கும் ஆப்த வாக்கியங்கள் உள்ளன. நேதி நேதி நேதி (இவையல்ல இவையல்ல இவையல்ல) அகம் ப்ரம்மாஸ்மி (நானே ப்ரம்மம்)  பிரக்ஞானம் ப்ரம்மாஸ்மி (பிரக்ஞயே ப்ரம்மம்), ஈசாவாஸ்யம் இதம் சர்வம் (இவையனைத்திலும் இறை உறைகிறது) தத்வமஸி (அது நீயே தான்) ஆகியவை புகழ் பெற்றவை. ஆதி வேதாந்தத்தின் மூலக் கருத்துக்களாக இவற்றை கொள்ளலாம்.  

இந்திய மெய் ஞான மரபின் உச்சம் 

            ரிக் வேதத்தின் சிருஷ்டி கீதத்தில் உள்ள ஒரு பாடலை நமது மரபின் உச்சமான ஒரு புள்ளி எனக்கூறலாம். 

           " அதை யார் சிருஷ்டித்தார்கள் 
            அல்லது சிருஷ்டிக்க வில்லை                 
            வானில் உறையும் 
            அதுவே அறியும் 
            அல்லது அதுவும் அறியாது.
                        
            பல இடங்களில் எரியும
            தீ ஒன்றே 
            எங்கும் ஒளிரும் 
            சூரியனும் ஒன்றே 
            எவற்றையெல்லாம் 
            ஒளிர வைக்கும் 
            உஷை ஒன்றே 
            அந்த ஒன்றே 
            இவையெல்லாம் (ரிக் வேதம் VII 58.2)

             என்ற ரிக் வேதத்தின் பிரம்ம தரிசன பாடல் பல நூற்றாண்டு ஆன
போதிலும் தன ஒளியை சிறிதும் இழக்கவில்லை. இந்த கருத்துரு 
பிரபஞ்சத்தை ஓர் உச்ச மன நிலையில் ஒற்றை பேருறுப்பாக கண்டதின் விளைவே எனலாம்.  இது இந்தியாவின் அத்தனை சிந்தனை மரபிலும் செல்வாக்கு செலுத்தியது.பௌத்தர்களின் மஹாதர்மம் பிரம்மத்தின் வேறு வகை விளக்கமே. மேலும் மகா சூன்யமும் வேறல்ல. இந்தியா மட்டும் அல்லாது சீன ஜப்பானிய சிந்தனை மரபிலும் ப்ரம்ம தத்துவம் பெரும் தாக்கத்தை நிகழ்த்தியது. அதி நவீன இயற்பியல் அறிஞர்கள் வரை அந்த ஒளி வீச்சு நீடிக்கிறது. மிக உச்ச நிலையில் பிரபஞ்சம் என்பது ஒற்றை பெரு நிகழ்வே எனவும் அதற்கு சாராம்சமான ஓர் இலக்கும் திட்டமும் உள்ளது எனவும் கூறலாம்.   இதே கருத்தை தான் எல்லா இந்திய மரபுகளும் சொல்கின்றன என கூற முற்பட்டால் அது பெரும் தவறாக முடியும்.
இக் கருத்தை தவறாக புரிந்து கொண்டு பலர் மன மயக்கங்களில் திளைத்து கொண்டு இருந்தார்கள்.நிகழ்ந்து கொண்டு இருக்கும்  கொடுமைகளும் அடக்கு முறைகளும்  புறந்தள்ளப் பட்டன..  





           ஆனால் இந்தியாவில் எழுந்த எல்லா தரப்புகளிடமும் தொடர் விவாதம் நடத்தியதில் விளைவாக எல்லாவற்றிலும் உள்ள நல்ல அம்சங்களை வேதாந்த மரபு உள்வாங்கி கொண்டது. பௌத்த சமண மதங்களிடம் ஆழமான விவாதத்தில் ஈடு பட்டத்தின் விளைவாக பிற்கால வேதாந்தந்களான  சங்கர வேதாந்தம், அதில் இருந்து விசிஷ்டாஷ்வைதம் மற்றும் துவைதம் ஆகிவையும் தோன்றின. ஐரோப்பிய மத சிந்தனைகளிடம் உரையாடியதின் விளைவாக ப்ரம்ம தத்துவம் முழு முதல் தெய்வம் என்ற கருதுகோளுக்கு அருகே கொண்டு வர பட்டது. உதா: நாராயண குரு, விவேகானந்தர் சிந்தனைகள். பிற தரிசனங்களை மறுக்க வேதாந்தம் பயன் படுத்திய இடைவெளி மனிதனால் இன்னும் விளக்க முடியாத ஐந்து பெரும் புதிர்கள் தான். மனம் உடல் உறவு, உயிர் ஜடம் உறவு,  சக்தி பொருள் உறவு, கால வெளி உறவு, சாத்தியககூறுக்கும் நிகழ்வுக்கும் இடையே உள்ள உறவு ஆகியன. 
இவற்றை விளக்குவதில் பௌதிக தரிசனங்கள் திணறிய பொது வேதாந்தம் தனது தருக்கத்தால் வென்று முன் சென்றது. ஆனால் வேதாந்தமும் திட்டவட்டமான புறவய விடை எதையும் தரவில்லை. அக வய அனுபவத்தை ஆதாரமாக கொண்ட ஒரு ஊகத்தையே (பிரம்மம்) முன் வைக்கிறது.
அதன கவித்துவ தன்மையின் காரணமாக இன்னும் முக்கியத்துவம் குறையாமல் அது இருப்பினும் ஓர் ஊகமாகவே உள்ளது. தத்துவ மதிப்பு ஏதும் அதற்கு இல்லை. 

          வேதாந்தம் சாமானியம் விஷேசம் என அறிவை இரு நிலைகளாக பிரித்து விடுகிறது. அனைத்தும் பிரம்மமே என்பது விஷேச அறிவு. ஆனால் கொல்ல வரும் புலியும் வாலாட்டும் நாயும் வேறு என்பது சாமானிய அறிவு. இரண்டும் முரண்கள் அல்ல. ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். இந்த சாராம்சத்தை காண வேண்டியது முக்கியம். புலியும் நாயும் ஒன்றே என புரிந்து புலியிடம் இருந்து விலகி சென்று விடும் அதே நேரம் அந்த புலியிடமும் கருணையுடன் அணுகுவதே விவேகம். இதை உணர்ந்த ஞானிகளே வேதாந்தத்தை மானிட சமத்துவத்திற்கும் பொது நீதிக்கும் 
விடுதலைக்குமான ஆயுதமாக மாற்றினார்கள். விவேகானந்தர், நாராயண குரு, அய்யா வைகுண்டர், சட்டம்பி ஸ்வாமிகள், ஆத்மானந்தர் மேலும் எண்ணற்ற துறவிகளும் வேதாந்தத்தில் இருந்தே மனிதர்கள் அனைவரும் சமம் எனும் சிந்தனையையும், , புல் பூண்டு புழு ஆகியவையும் கூட 
மனிதருக்கு நிகர் தாம்.  அனைத்து உயிர்களும்  ஒன்றே என்ற பெரும் கருணை தரிசனத்தை வேதாந்தத்தில் இருந்து பெற்று கொண்டு தான் அவர்கள் சமூக போராளிகளாக ஆனார்கள்.         

முடிவாக 

        இந்திய நிலப்பரப்புக்கு என பொதுவான அடிப்படை மன உருவகங்கள் உண்டு. இங்கே வரும் ஒரு புதிய சிந்தனையும், இங்கேயே பிரிந்து வரும் சிந்தனையும், இங்குள்ள உருவகங்களுடன் இயல்பாகவே இணைந்து கொண்டே வடிவம் கொள்ளும் .இந்திய சிந்தனைகளை புரிந்து கொள்ள இதன் அடிப்படைகளை விளங்கி கொள்வது அவசியம்.இந்திய சிந்தனைகளை பற்றி பேசும் கணிசமான அறிவு ஜீவிகள் வெறும் மேற்கோள் பொறுக்கிகளாகவும் , கலைச்சொல் இறக்குமதியாளர்களாகவும்,  அடிமைத்தனம், பரபரப்பு மனநிலை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். இதற்கான காரணம் இவர்களுக்கு அடிப்படை மனநிலை மீது ஆர்வமும் புரிதலும் இல்லை என்பதே .
       உலகின் எந்த சூழலிலும் சிந்தனையானது அதன் வேரில், மரபில் இருந்து பிரிக்க படுவது இல்லை. நமது சமகால சிந்தனைகளை ஆழமான மரபில் இருந்து விமர்சன பூர்வமாக ஆராய்வது தான் முதற் கட்ட பயிற்சியாகும்.
இங்கே, ஒரு புறம் பழையது, புதியது, முற்போக்கு, பிற்போக்கு என சொல்லி அறிவு ஜீவிகளால் மரபு புறக்கணிக்க படுகிறது. அதே நேரத்தில், இவர்கள் வழி படும் மேற்கத்திய சிந்தனையாளர்களால் பிளட்டோவோ அல்லது ஹெகலோ ஏனையோரோ, பழையது அல்லது பிற்போக்கு என நிராகரிக்க படவில்லை என்பதை .இவர்கள் உணர்வதில்லை. இரண்டாவது பிரச்னை பாமர தன்மை. சிந்தனையின் ஒரு பகுதியை மட்டும் பூதாகரமாக காண்பித்து மற்றவை காலாவதி ஆனவை என சொல்வது.  பக்தி மார்க்கம் அதன் தத்துவங்கள் மட்டுமே இந்து சிந்தனை என்று ஒரு சாராரால் தீவிரமாக வாதிடப்படுகிறது. மறுபுறம் பௌதிக வாதம் மட்டுமே சரி, மற்றவை காலாவதியானவை என்கிறார்கள். இரண்டுமே அரை உண்மைகள் என்பதை இந்நூல் காட்டுகிறது இந்து சிந்தனை மரபில் ஆன்மிக வாதமும் பௌதிக வாதமும் சமானமான பங்கை வகித்து ஒன்றை ஒன்று வளர்த்து உள்ளது.. 

        மேற்கத்திய சிந்தனையின் தாக்கம் காரணமாக, வெறும் பிரதி எடுப்பு,
மொழி பெயர்ப்பு அறிவு சூழலே இங்கே நிலவுகிறது.இப்படி பட்ட இறக்குமதி சிந்தனை சூழலானது  அடிமை தனத்தையே வளர்க்கும். வந்து சேரும் சிந்தனைகளை பரிசீலிப்பதற்கே கூட நமக்கு சுய சிந்தனை தேவை தன்னை மரபின் நீட்சியாக உணர்ந்து, ஆழமான விமர்சன அணுகு முறையை உருவாக்கி கொள்வதே ஒரு முழுமையான அறிதலை உருவாக்கும். இந்து சிந்தனை மரபை ஆறு தரிசனங்களில் இருந்து கற்பதே சிறந்த தொடக்கமாக அமையும்.இந்து சிந்தனை மரபுக்கும் பிறவற்றுக்குமான உரையாடலாக இந்திய சிந்தனையை புரிந்து கொள்ளும் நிலையே அடுத்த படி.
வாழ்வின் அர்த்தத்தைத் தேடி ஆயிரம் ஆயிரம் வருடங்களாக மனிதமனம் செய்த பெரும் பயணங்களின் தொகுப்புதான் இந்து ஞானமரபு. எந்தப் பயணத்தையும் இன்று நாம் புதிதாக மேலும் தொடர முடியும். எல்லா நதிகளும் கடலையே சென்று சேர்கின்றது என்று இதைப்பற்றி சாந்தோக்ய உபநிஷதம் கூறுகிறது.     




         



   



      

Comments

Popular posts from this blog

Hindus in Hindu Rashtra book - my impressions

Spectrum of Left - Part 1 / Time to retrieve left from orthodoxy

Spectrum of left - part 4 / The differences