காந்தி 150 ..... ...

காந்தி 150 .... காந்தி இன்றும் போற்றப் பட வேண்டுமா... விமர்சனங்களும் விளக்கங்களும் ...
காந்தி அவர்களின் 150 வது பிறந்த தினம் கொண்டாடும் இவ்வேளையில் அவரைப் பற்றிய எதிர் மறை  கருத்துக்களுக்கான காந்தி தரப்பு விளக்கங்களை இங்கே பகிர்வது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். கோட்ஸே தரப்பு தனது எதிர் வினைகளை பொது வெளியில் மிக அழுத்தமாகவும் வலிமையாகவும் எடுத்து வைத்துக் கொண்டு இருக்கும் இன்றைய காலகட்டத்தில் அவைகள்  கட்டாயமாகத் தேவைப்படுகிறது.

எழுபது ஆண்டுகள் பின்னரும் தொடரும் எதிர் மறை விமர்சனங்கள்

       காந்தி இறந்து 70 ஆண்டுகள் கடந்தும் கூட ஏன் மிக கடுமையாக விமர்சிக்கப் பட வேண்டும் என்ற கேள்வி இயற்கையாகவே எழுகிறது. நமது சுதந்திரத்திற்கு போராடிய பல தலைவர்கள் இருக்க அவர்கள் எல்லோரையும் விட அதிக எதிர்மறை விமர்சனத்திற்கு ஏன் காந்தி ஆளாக்கப்படுகிறார். அந்த விமர்சனங்கள் எல்லாம் நியாயமானது தானா என்றும் பார்க்க வேண்டிய நேரம் இது.காந்தி மட்டும் இன்றி எந்த ஒரு வரலாற்று கதா பாத்திரத்தையும்  சரியான ஒரு கோணத்தில் விமர்சனத்திற்கு ஆளாக்குவது என்பது தான் சரியாக இருக்க முடியும் என்றாலும் அவை அவதூறாக இல்லாமல் இருப்பது அவசியம். இங்கே நமது நாட்டில் தலைவர்கள் சிலரை  யாரும் விமர்சனமே செய்ய முடியாத நிலை உள்ளது. காரணம் அவர்கள் அதீதமாக புனித படுத்த பட்டமையும், அவர்களை வைத்து அரசியல் நடத்தும் அமைப்புகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதும் தான். அதே நேரத்தில் காந்தியை கிண்டல் கேலிக்கு ஆளாக்கும் போது போராட  எவரும் இல்லை.ஆகவே  தொடர்ந்து அவரை பற்றிய கடுமையான கருத்துக்களும் சில அவதூறுகளும் வந்து கொண்டே இருப்பதை  காண்கிறோம்.

          இன்றைக்கு மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா ஜ க வின் இந்துத்துவ முன்னோடிகள் (வலது சாரிகள்) தான் காந்தி கொலையுண்டதற்கு காரணம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம். காந்தியை வலப்புறத்தார்கள் (right wing forces ) மட்டும் தான் விமர்சிக்கிறார்களா என்றால் நிச்சயம் இல்லை. உலகம் முழுவதும் கொண்டாடப்படும்  ஒரு நபர் சொந்த நாட்டில் பல அமைப்புகளுக்கு ஏன் ஆழமான அமைதியின்மையை (deep unease) ஏற்படுத்த வேண்டும்?  இந்தியாவில் உள்ள அமைப்புகளுக்கு காந்தி மேல் 1948-ல் இருந்த unease இன்றும் நீடிக்கிறது என காந்தி துறை வல்லுனரும் தனது வாழ் நாள் முழுக்க காந்தி பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் ட்ரைதிப் சுகுருட் தெரிவிக்கிறார். அந்த அமைதியின்மைக்கு காரணம் அவரது வெளிப்படையான சமூக தத்துவ மற்றும் கலாச்சார பார்வையே காரணம் எனவும் காந்தியின் முக்கியத்துவம் இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது என்றும் அவர் கருதுகிறார். . மூன்று  தோட்டாக்களை வைத்து ஒரேயடியாக காந்தியை கொன்று அழித்து விட்டோம் என  நினைத்த கும்பலுக்கு  தனது எண்ணங்களை முழுவதும் நிறைவேற்ற முடியாமல் இருக்கின்ற தவிப்பே காந்திக்கு எதிரான குமுறல்களாக இன்னும் வெளிப்பட்டு கொண்டிருக்கிறது எனலாம்.

அம்பேத்கரும் காந்தியும்

      நவீன இந்தியாவின் பெரும்  விவாதங்களில் ஒன்று காந்தி அம்பேட்கர்
பற்றியது. அதில் நிச்சயமாக சொல்ல முடிகின்ற விஷயம் அம்பேட்கர் அவர்களிடம் இருந்து காந்தி கற்ற பாடங்கள்.  தீண்டாமை பற்றிய காந்தியின் பார்வை மாற்றத்திற்கான உத்வேகம் அம்பேட்கர் எழுத்துக்களில்
இருந்தே வருகிறது. அது வரை தீண்டாமை பற்றி பாவம் என்று மட்டும் பேசி வந்த காந்திக்கு, பாவத்தை தாண்டி அது ஒரு அவமானகர செயல் என்பதை புரிய வைத்தது அம்பேட்கர் தான் என்று சொல்லலாம்..அம்பேத்கர் சந்திப்புக்கு  பின்னரே காந்தியின் பார்வை மேலும் விசாலம் அடைந்து அவர் மேலும் சிறந்த மனிதராக பரிணமிக்கிறார் என வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.   சுதந்திர இந்தியாவில் சில முக்கிய பணிகள் அம்பேத்கருக்கு வந்து அடைந்ததற்கான காரணம் அவைகளை  செய்வதற்கு மற்ற எல்லாரையும் விட அவருக்கு இருந்த தகுதி ஒரு புறமும், அம்பேத்கர் இல்லாமல்  புதிய இந்திய அரசு அமைய முடியாது என்ற காந்தியின் அழுத்தமான நம்பிக்கையும் உதவி இருக்கின்றன என்று சொல்ல முடியும்.
நேருவின் மந்திரி சபையில் அவரே ஆகச் சிறந்த ஜீீனியஸ் என காந்திய அறிஞர் ட்ரைதிப்
குறிப்பிடுகிறார்.
        இன்று காந்தி பற்றிய எதிர் மறை பிரச்சாரங்களை சில தலித்  அமைப்புகளும் செய்து வருவதை காண முடிகிறது. இதை பற்றி கூறும்  ட்ரைதிப், காந்தியையும் அம்பேத்கரையும் நேர் எதிராக நிறுத்துவது என்பது தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தில் எந்த வித பலனையும் அளிக்க போவது இல்லை. அதே நேரம் இருவரையும்  இணைத்து கொண்டு செயல் பட்டால் அது நாம் எதிர் பார்ப்பதை காட்டிலும் ஒரு  பெரும் வல்லமையை போராட்டத்திற்கு கொடுக்கும் எனக் கூறுகிறார். காந்திக்கும் அம்பேத்கருக்கும் இருந்த வேறுபாடுகள் தனிப்பட்டவை அல்ல, தொடர்ந்து மாறிக் கொண்டே இருந்த கொள்கைகள் அடிப்படையிலானவை என்றும் அவர்களுக்கு இடையே எக்காலத்திலும் பகை(animus) இருந்தது இல்லை எனவும் குறிப்பிடுகிறார்.
தன்னுடைய  இரண்டாவது திருமணத்தின் போது, திருமண பத்திரிகையை காந்தியின் செயலாளர் பியாரே லால் அவர்களிடம் கொடுக்கையில்  அம்பேத்கர்
" நிச்சயம் பாபுஜி (காந்தி) இந்த திருமணத்தை அங்கீகரித்து இருப்பார்" என்று குறிப்பிட்டு உள்ளார். இது அவர்களுக்கு இடையே இருந்த புரிதலை குறிப்பதாக இருக்கிறது.


    வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குஹா அவர்கள் ஒரு நேர் காணலில்,
ஒருவர் அம்பேதகரை விட காந்தியை கூடுதலாக புகழலாம், மற்றொருவர்  அம்பேத்கரை  அதிகம்  புகழ்ந்து பேசலாம்.ஆனால் ஒருவரை புகழ்வதற்காக இன்னொருவரை இகழ வேண்டியது இல்லை என்று குறிப்பிடுகிறார். துரதிர்ஷடவசமாக இங்கே அருண் ஷோரி போன்றவர்கள் அம்பேத்காரை தாழ்த்தியும் காந்தியை உயர்த்தியும் பிடிக்கிறார்கள். அருந்ததி ராய் போன்றவர்கள் நேர் எதிராக காந்தியை பற்றி குறை கூறியும் அம்பேத்காரை வெகுவாக புகழ்ந்தும் பேசியும் எழுதியும் கொண்டு இருக்கிறார்கள் எனும் குஹா, அது தேவையற்றது என்கிறார். இதில் குறிப்பிட வேண்டிய ஒரு விஷயம் காந்தி அவர்களை பற்றி கடுமையாக விமர்சனம் செய்வது என்பது இன்றைக்கு சிலரால் முற்போக்காக கருத படுவது தான்.. சரியான வரலாற்று பார்வையும் தேசத்தின் மீது உண்மையான அக்கறையும் உடைய எவரும் இவ்வாறு அவதூறு பிரச்சாரங்களில்ஈடுபடுவது இந்த தேசத்தின் நலன்களுக்கு எதிராகத் தான் முடியும்.

 தலித் பிரச்சனைகள் மற்றும் பூனா ஒப்பந்தம்

       காந்தியின் படுகொலைக்கு  இந்து முஸ்லீம் பிரச்சனையில் அவருடைய நிலைப்பாடுகள் சனாதன இந்துக்களை ஆத்திரப்படுத்தியது என்பது ஒரு பொதுவான புரிதல். இதை தாண்டிய மற்ற ஒரு முக்கிய காரணம் அவரின்
தொடர்ந்த தீண்டாமைக்கு எதிரான இயக்கங்கள். வெற்றிகரமாக உப்பு
அறப்போரை முடித்த கையோடு  மற்றும் ஒரு அரசியல் இயக்கத்தை அவரால் தொடங்கி நடத்தி இருக்க முடியும். ஆனால் தண்டி யாத்திரைக்கு(1932) பின் உடனடியாக அவர் அரசியல் இயக்கத்தில் இருந்து சமூக இயக்கம்  நடத்த ஆரம்பித்து கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு (1942 வரை) இந்தியா முழுவதும் பின்னாளில் 'ஹரிஜன் யாத்திரைகள்' என்று அறிய பட்ட பயணங்களை மேற்கொள்கிறார். அந்த கால கட்டத்தில் தலித் பிரச்னைகளை தவிர வேறு எதையும் அவர் அதிகம் பேசாமலிருக்க காண்கிறோம். தீண்டாமைக்கு இந்தியா சுமூக தீர்வு காணாமல் சுதந்திரத்திற்கு இந்த நாட்டு  மக்கள் தகுதி உடையவர்கள் இல்லை என பேசி தலித் அல்லாத மக்களை திகைக்க செய்கிறார்.  

              பிரிட்டிஷ் இந்தியாவில் (1932) சட்டமன்றத்தில் தலித்துகளுக்கு முஸ்லீம், சீக்கிய மக்களை போல இரட்டை வாக்குரிமையை தர பிரிட்டிஷ் அரசு தயாராக இருந்தது. அந்த உரிமையை பிரிட்டிஷாரிடம் இருந்து பெற்று கொடுத்த அம்பேத்கர் போன்றவர்கள் அதை ஆர்வமாக வரவேற்ற சூழலில் அதை மிக கடுமையாக எதிர்த்த காந்தி தலித்துகளுக்கு இரட்டை வாக்காளர் உரிமை அளிக்க பட கூடாது என சொல்லி சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க தொடங்குகிறார். அதை கண்டு மனம் வெதும்பிய அம்பேத்கார் ,காந்தி உணர்வு ரீதியிலான மிரட்டல் (எமோஷனல் பிளாக்மெயில்) விடுக்கிறார் என சாடுகிறார். ஆனாலும்காந்தி உண்ணாவிரதத்தில் உயிர் இழந்தால் தலித்துகள் மீது பழி விழும் என அஞ்சி பூனா ஒப்பந்தத்தில் அம்பேத்கார் கையொப்பம் இடுகிறார். ஒப்பந்தத்தின் ஷரத்துகள் படி தலித்துகள் இரட்டை வாக்கு மற்றும் தொகுதிகள்  என்பதற்க்கு பதிலாக குறிப்பிட்ட அளவு தொகுதிகளை பொது இடங்களில் இருந்து பெறுவது என முடிவு ஆகியது. அந்த ஒப்பந்தம் பிரிட்டிஷ் தருவதாக இருந்த தனி தொகுதிகளை  விட அதிகம் என்பதும் அந்த தொகுதி ஒதுக்கீடு முறை சுதந்திரத்திற்கு பின்னரும் பாராளுமன்றம் உட்பட அனைத்து மட்டங்களிலும் இன்று வரை தொடர்ந்து கொண்டும் இருக்கிறது என்பதையும் நாம் பார்க்கிறோம்
   
         இரட்டை வாக்கு உரிமை என்பது தலித்துகளை பொது வெளியில் இருந்து நிரந்தரமாக பிரித்து சென்று விடும் அபாயம் இருப்பதாகவும் அது தேச ஒற்றுமைக்கு கேடு எனவும் காந்தி நம்பினார். ஏற்கெனவே அமுலில் இருந்த முஸ்லிம்களுக்கும் சீக்கியர்களுக்கும்  தனி வாக்கு பிரிட்டிஷார் அளித்தது என்பது பிரித்தாளும் சூழ்ச்சியின் ஒரு பகுதியே.எனவே அதை போன்றே தலித்துகளையும் அவர்கள் பிரிக்க நினைப்பதாக காந்தி எண்ணியே அதை கடுமையாக எதிர்த்திருக்கிறார் என கருதலாம். காந்தி தீவிர அரசியலுக்கு வரும் முன்பே கொடுக்கப் பட்ட முஸ்லீம் சீக்கிய தனி வாக்கின் எதிர்மறை விளைவுகளை ஆராய்ந்த காந்தி அவ்வாறு தலித்துகள் விஷயத்திலும் நடப்பதை தவிர்க்க முனைந்திருக்கிறார். முஸ்லிம்கள் தனி நாடாக சென்றதும் சீக்கியர்களும் காலிஸ்தான் கோரிக்கையை 1942 முதலே எழுப்ப தொடங்கி விட்டனர் என்பதும் வரலாற்று பதிவுகள். .

      இன்றைக்கும் தலித்துகள் வாழ்வுரிமைக்கான போராட்டம் வெகு தொலைவு பயணம் செல்ல வேண்டி இருந்தாலும் அனைத்து பிரிவினரும் சேர்ந்தே தலித்துகளை பிரதிநிதிகளாக தேர்ந்து எடுப்பது என்ற காந்தியின் அன்றைய வாதம் பின்னாளில் சுதந்திரம் கிடைத்த பின் எந்த ஒரு
சர்ச்சையும் இல்லாமல் தனி தொகுதிகளை எல்லா மட்டத்திலும் அவர் கள்  பெற உறுதி செய்வதாக இருந்தது.  ஆனால் சீக்கிய முஸ்லிம் தனி வாக்கு உரிமைகள் சுதந்திரத்திற்கு பின் கைவிடப்பட்டது. எனவே இங்கே காந்தியின் நோக்கம் குறித்து எந்த வித சந்தேகமும் இருக்க முடியாது. அதே சமயம், இந்திய வரலாற்றின் மிக முக்கியமான (pivotal) இந்த நிகழ்வில் அம்பேத்கர் அவர்களின் பிரதானமான ஒரு சாதனையாக காந்தியின் கவனத்தை  தலித்துகளை நோக்கி முழுமையாகத் தள்ளியதை குறிப்பிடலாம். (literally pushed)

   படுகொலையும் பிரிவினை கலவரங்களும்                                                                   

    காந்தி தான் கொலை செய்யப் பட்டு விடுவோம் என எண்ணி கலக்கமோ பயமோ கொண்டு இருந்தாரா என்பதற்கு காந்திய அறிஞர் ட்ரைடிப் அவர்கள் நிச்சயமாக இல்லை என்கிறார். மாறாக தனது இறப்பு எந்த நோக்கமும் இன்றி சந்தடி இன்றி நடந்து விடுமோ என்று தான் அவர் நினைத்து கொண்டிருந்தார்
என அவர் கூறுகிறார். அவர் கொலை செய்யப் பட்ட பிறகு இந்திய பகுதியிலும் பாகிஸ்தான் பகுதியிலும் மிக பயங்கரமாக நடந்து கொண்டு இருந்த கலவரங்கள் அறவே நின்று போனதை சொல்லும் அவர் அதற்கு பின்னர் 15 ஆண்டுகள் வரை இந்தியாவில் மத கலவரம் ஏதும் நிகழாமல் இருந்தது என்பது அந்த படு பாதக செயலால் மக்கள் மத்தியில் ஏற்பட்ட திகைப்பின் விளைவே என்றும் அது, புதிய தேசம் உருவாகி வருவதற்கு பேருதவியாக இருந்தது எனவும் அவர் கூறுகிறார்.


 தேச பிரிவினைக்கு காந்தி காரணமா?

       தன்னுடைய பிணத்தின் மீது தான் இந்த நாடு இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற காந்தி பின்னர் பிரிவினைக்கு ஒப்புக் கொண்டார் என்பது அவர் மீது வைக்கப் படும் மற்றொரு குற்றசாட்டு. தன்னுடைய தென் ஆப்பிரிக்க அனுபவத்தை கொண்டு இந்தியாவில் உண்மை, அன்பு, சுயநலமின்மை,
சகிப்புத்தன்மை, தியாகம் ஆகியவைகளை ஆயுதமாக கொண்டு சத்தியாகிரகம் என்கிற அறப்போரில் இந்தியர்கள் அனைவரையும் பேதமில்லாமல் ஒரு குடைக்கு கீழ் இணைத்து கொண்டு சுதந்திர போராட்டங்களை முன் எடுத்த காந்தி, மற்றொரு புறம் அவர்கள்
தங்களை தாங்களே ஆள்வதற்கான தகுதியை வளர்த்து கொள்ள தேவையான சமூக இயக்கங்களையும் கட்ட முற்பட்டார். தீண்டாமைக்கு எதிரான போராட்டத்திறகு அவர் கொடுத்த முக்கியத்துவத்தை வரலாறு பதிவு செய்து இருக்கிறது. மன ரீதியாக நாம் நம்மை ஆள முடியும் என்ற கருத்தியலை சாதாரண மக்கள் மனதில் ஆழமாக விதைத்தவர் என்பதாலேயே தேசத்தின் தந்தை என அவர் போற்ற படுகிறார்.

    தேசம் பிளவுண்ட போது  நடந்த நிகழ்வுகள் காந்தியை மீறி சென்று கொண்டிருந்தவை என  ராமச்சந்திர குஹா போன்ற வரலாற்று நிபுணர்கள் பதிவு செய்கிறார்கள். அன்றைய காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் தலைவர்களிடையே ஏற்பட்டு விட்ட அவ நம்பிக்கையும் புரிதலின்மையும் தான் பிரிவினைக்கு காரணமே ஒழிய என்ன செய்து இருந்தாலும் ( சாகும் வரை உண்ணா விரதம் உட்பட) காந்தியால்  தவிர்த்து இருக்க முடியாத நிகழ்வாக தான் தேசப்பிரிவினை இருக்கிறது. இந்தியாவின் மூன்றில் ஒரு பங்கு பகுதிகளை அன்று ஆண்டு கொண்டு இருந்த கிட்டத்தட்ட 570 சமஸ்தான ராஜாக்களும் எந்த ஒரு பிணக்கும் செய்யாமல் இந்தியாவோடு இணைந்ததற்கு  (மூவர் தவிர) , சமஸ்தானங்களின்  பிரஜைகளுக்கு காந்தியின் காங்கிரஸ் மேல் பெரிய செல்வாக்கு இருந்தது தான் பிரதான காரணம். அத்தோடு கூடவே படேல் போன்றவர்களின் ராஜ்ய ரீதியாலான நடவடிக்கைகள் உதவி செய்து இருக்கிறது எனலாம்.  மக்கள் செல்வாக்கு இல்லாமல் ராஜதந்திர விஷயங்கள் எந்த அளவிற்கு உதவி இருக்க முடியும் என்பது கேள்வி குறியே. ஆகவே, பல தேசங்களாக பிரிந்து செல்வதற்கு வாய்ப்பு இருந்த இந்திய துணைக்கண்ட பகுதிகள் வெறும் இரண்டு பகுதியாக மட்டுமே பிரிந்ததற்கும் இன்று வரை ஆயிரம் சிக்கல்களுக்கு மத்தியில் அப்படியே நீடிப்பதற்கும் காந்தியும் காந்தீய கொள்கைகளும் முக்கிய காரணிகளாக விளங்குகின்றன என்பதை எவரும் மறுக்க இயலாது.
காந்தீயம் காத்தல்
       காந்தியை கடுமையாக நிந்தனையும் அவதூறுகளும் செய்து அவரின் உடலை மண்ணில் சாய்ப்பதற்கு காரணமாக இருந்த சக்திகள் இன்று வரை கருத்து ரீதியாக காந்தியை  முழுமையாக வெல்ல முடியாமல் இருப்பதே இந்தியாவின் ஒற்றுமைக்கும் அமைதிக்கும் மட்டுமல்ல இங்கிருக்கும் ஜனநாயகத்திற்கும்  காரணமாக இருக்கிறது. எனவே காந்தியை மேலும் மேலும் வாசிப்பிற்கு உட்படுத்தி, பல கோணங்களில் இருந்து புரிதலை உருவாக்கி கொள்ளுதல் அவசியம். பரந்து பட்டுள்ள இந்த தேசத்தின் பன்மைத் தன்மையையும் ஒற்றுமையையும் காப்பதற்கு காந்தீய விழுமியங்களை பாதுகாப்பதே இன்றைய தேவை.

     
   











                                                                                   Sources : Open Conversation with TRIDIP SUHRUD (  OPEN magazine dt 8.10.18)
                'Gandhi Before India" ,Ramachandra Guha & Guha's recent interviews in India today and New Indian Express.   
                D G Tendulkar biography on Gandhi .
(www.mkgandhi.org)             
                July 8, 2012 article .". ..slander on gandhi"in "Contrarian world" blog.
       
  

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்