காந்தி 150 - காந்தியும் கார்ல் மார்க்சும் - ஒரு புதிய பார்வை - அகீல் பில்கிராமி

காந்தி 150 -  காந்தியும் கார்ல் மார்க்சும் -  ஒரு புதிய பார்வை -  அகீல் பில்கிராமி

                காந்தி,கார்ல் மார்க்ஸ் இருவரும்  வேறுபட்ட துருவங்களாகத் தான் பார்க்கப் படுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம். மார்க்சிய அறிஞர்களும் காந்தீயர்களும் சந்திக்கக் 
கூடிய புள்ளி எதுவும்  இருக்க முடியாது என்றே உறுதியாக சொல்பவர்கள் உண்டு.

                எனினும் இருவரது கருத்துகளும் ஒத்துப் போகின்ற  தளங்கள்
 உள்ளன என்று தத்துவ அறிஞரும் கொலம்பியா பல்கலைகழகத்தின் பேராசிரியருமான அகீல் பில் கிராமி குறிப்பிடுகிறார். மேலோட்டமாக பார்க்கும் போது ஒற்றுமைகள் ஏதும் இல்லை என்றாலும் சில விளக்கங்கள் (interpretations) வழியாக ஒன்றாக உள்ள அம்சங்களை அகீல் பில் கிராமி நிறுவ முயற்சிக்கிறார்.

               இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள இடது சாரி அறிஞர்களுக்கு  காந்தி பற்றிய மிக கடுமையான விமர்சனங்கள் ஒரு புறம்  இருந்தாலும், அவரின் எழுத்துகள்  மற்றும் செயல்களில் இருந்து தீவிரமான,அசலான இடது சார்பு தன்மை கொண்டவற்றை தோண்டி எடுத்து விவாதங்களை முன் எடுக்க வேண்டும் எனவும் கூறும் அவர்  காந்தியை எவ்வகையிலும் சோசலிச கம்யூனிச எண்ணங்கள் கொண்ட நபர் என்று சொல்ல முடியாது எனினும் அவர் முதலாளித்துவத்தின் தீமைகள் குறித்தும் அது தனி மனிதனிடத்தும்  மற்றும்  சமுதாயத்திலும் ஏற்படுத்தும் கேடுகள் குறித்தும் உறுதியான கருத்துக்களை வெளிப்படுத்தியவராக சொல்கிறார். வர்க்கம் என்பதற்கான புரிதலே காந்தி அவர்களிடம் இல்லை என கூறும் பில் கிராமி  பல தத்துவ வாதிகளை போலவே காந்தியின் எண்ண ஓட்டமும்  ஒரே சீரானதாக இல்லாமல் உள்ளதாகவும் அவர் கருதுகிறார் . அப்போதைய அரசியல் தேவைக்கேற்ப கருத்துகளை கூறி விட்டு பின்னர் ஆழ்ந்து சிந்தித்து எழுதும் பொழுது அதே விஷயத்தை சற்றே வேறு விதமாக சொல்பவராகவும் அவர் இருக்கிறார் என அவர் கருதுகிறார். வரலாற்று ஆசிரியர் இர் பான் ஹபீப் அவர்கள் தான் முதலில் காந்தியை வரலாற்று ரீதியாக நேர்மறையாக பதிவு செய்த இடது சாரி என்று கூறலாம் எனில் தத்துவ ரீதியில் சாதகமாக காந்திய விளக்கங்களை இடது கண்ணோட்டத்தில் தாமே முதலில் முயன்று உள்ளதாக பில் கிராமி குறிப்பிடுகிறார்.

              காந்தி பற்றிய பில் கிராமி அவர்களின் புதிய நவீன கருத்துகள் அடங்கிய "காந்தி ஒரு தத்துவ அறிஞர்" என்ற வெளியீட்டில் மார்க்சும் காந்தியும் அறிவு சார்ந்த உலகியல் கருத்தியலில் ( epistemological worlds) உடன் பட்டு இருப்பதையும் இருவருமே முதலாளித்துவமானது மக்களை எப்படி இயற்கையிடமிருந்து பிரித்து வைத்து அழிவுப் பாதைக்கே இட்டு செல்லும்
( phenomenon of alienation) என்பதில் உடன்படுகிறார்கள் என விளக்குகிறார். 

             காந்தி அவர்களுடைய 1909 ல் எழுத பட்ட ஹிந்த் ஸ்வராஜ் என்ற புத்தகத்தில், பிரிட்டன் எப்படி 'முன் நவீன' காலத்தில் இருந்ததோ அதே போன்ற ஒரு நிலையில் தான் இந்தியாவும் அப்போது இருக்கிறது எனவும் பிரிட்டன் அந்த இடத்தில இருந்து பின் நவீன காலத்திற்க்கு சென்ற அதே முதலாளித்துவ வழியை இந்தியா கொள்ள வேண்டியது இல்லை என குறிப்பிடும் காந்தி அதற்கான மாற்று வழிகளை அது தேட வேண்டும் என குறிப்பிடுகிறார். அந்த புத்தகத்தில் காந்தி முதலாளித்துவ நவீன யுகத்திற்கு எதிரான எண்ணங்களை கூறி அந்த பாதையை இந்தியா மேற்கொள்ளுவதை முன் கூட்டியே தடுப்பதற்கு முயலுகிறார்.

             கார்ல் மார்க்சும் ரஷ்யாவில் ஏற்பட உள்ள புரட்சிகர மாற்றங்களை பற்றியும் அதோடு இந்தியா போன்ற நாடுகளையும் பற்றி சொல்லும் போது பிரிட்டன் போன்ற நாடுகள் போலவே முதலாளித்துவ பாதை வழியாக புரட்சிகர பொருளாதார மாற்றங்களை நோக்கிய பயணம் செல்வதற்கு 
அந்த நாடுகளுக்கு அவசியம் இல்லை என்கிறார். 

தாராளவாத மந்திரங்கள்  - சுதந்திரம், சமத்துவம் (Liberty and equality)

                புதிய நவீன உலக சிந்தனைகளான தனி மனித சுதந்திரம், சமத்துவம் ஆகியன ஒன்றைக்கொன்று  முரண் படுகின்ற கருத்துக்களாக கூறுகின்ற
பில் கிராமி, அவைகளை முதன்மையான லட்சியங்களாக காந்தி, மார்க்ஸ் ஆகிய இருவருமே கருதி இருக்க வில்லை என நினைவு படுத்துகிறார். மார்க்ஸ் வெளிப்படையாகவே சுதந்திர சமத்துவ கருத்தாக்கத்தை பூர்ஷுவா சிந்தனைகள் என புறம் தள்ளுகிறார். காந்தி அவர்களோ இந்த முக்கிய தாராளவாத கருத்துக்களுக்கு எந்த வித முக்கியத்துவமும் அளிக்காமல் கடந்து செல்லுவதை அவரது எழுத்துக்களில் காண முடிகிறது.

                சுதந்திரம் சமத்துவம் ஆகிய இரண்டு கருத்தாக்கங்களை ஒன்றுக்கொன்று எதிர் எதிர் நிலையில் இருந்து கொண்டு முரண் படும் தன்மையினால் இரு தத்துவ வாதிகளும் அவைகளை நிராகரிப்பதாக
அகீல் பில் கிராமி தனது வெளியீட்டில் விளக்கி சொல்லுகிறார்.
மேலும் இருவரும் அவற்றுக்கு பதிலாக அதனை விட உயர்வான
(இயற்கையிலிருந்து) அயலாக்கப்படாத வாழ்க்கை (unalienated life) முறைகளையே முன் நிறுத்துவதாகவும் அவர் வாதிடுகிறார். இவ்வாறு
கூறுவதால் சுதந்திர மற்றும் சமத்துவ சிந்தனைகள் காலாவதி ஆகி விடவில்லை என்று கூறும் அவர் ஒரு புதிய கண்ணோட்டத்தில் மனித சமுதாயம் மேம்பட கருத்துக்களை வார்த்து எடுக்கும் பணி நடக்க வேண்டும்  என்கிறார்.

              காலனி ஆதிக்கத்தின் பின்னர் அதனை தொடர்ந்த முதலாளித்துவத்தின் பொருளாதார கட்டமைப்பின் மீது இடது சாரி சிந்தனையின் கவனம் (focus) அமைந்ததாகவும் காந்தி அவர்களின் எதிர்ப்பானது அந்த அமைப்புகளின்
தாக்கத்தால் விளையும் அறிவார்ந்த மற்றும் கலாச்சார பாதிப்புகளை
நோக்கியதாக இருப்பதாக பில் கிராமி கருதுகிறார்.
                     ************************************************

         

             
                           

             


               

Comments

Popular posts from this blog

Hindus in Hindu Rashtra book - my impressions

Spectrum of Left - Part 1 / Time to retrieve left from orthodoxy

Spectrum of left - part 4 / The differences