Gandhi 150 - காந்தி, தாகூர் மற்றும் கோல்வால்கரின் தேசியம் குறித்த அணுகுமுறைகள்

காந்தி, தாகூர் மற்றும் கோல்வால்கரின் தேசியம் குறித்த அணுகுமுறைகள்

                     காந்தி மற்றும் தாகூர் இருவரும் பிறந்து 150 வருடங்கள் கடந்து விட்ட போதிலும் நமது தேசம் குறித்த அவர்களின் கருத்துக்கள் பல இன்றைக்கும் விவாதிக்க கூடியதாக இருக்கிறது.

                     இந்திய தேசியமா இந்து தேசியமா என விவாதம் நடை பெற்று வரும் இன்றைய சூழலில் தேசப் பிதாவும் தேச நிர்மாணிப்பில் முக்கிய அறிவுப் பங்காற்றியவருமான குருதேவ் என காந்தி அன்பாக அழைத்த கவி ரவீ ந்திரநாத தாகூர் அவர்களுக்கும் இருந்த தேசியம் பற்றிய  உரையாடல்கள் சில மிக முக்கியமானவையாகவும் இன்று  நினைவு படுத்தக் கூடியதாகவும் உள்ளது .

           இந்தியா, பங்களாதேஷ் மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய மூன்று நாடுகளின்
தேசிய கீதங்களை எழுதிய கவி தாகூர் அவர்களின் தேசியம் குறித்த பார்வை மிக விசாலமான ஒன்று. கவிஞர்களுக்ககே  உரிய கனிவு மற்றும் கனவு தோரணையோடு தேசியம் பற்றி அணுகும் தாகூர், தேசியம் பற்றி
அதீத முக்கியத்துவம் அளிப்பது என்பது மனித குலத்தை அச்சுறுத்தும்
ஒன்றாகவே இருக்க முடியும் என குறிப்பிடுகிறார். பிரிட்டிஷ் தேசியத்தின்
தீய விளைவே இந்தியா போன்ற தேசங்களின் இன்றைய அடிமைத்தனம் என்று சொல்லும் அவர் குறுகிய தேச பக்தியை விட ஒட்டு மொத்த மனித கூட்டத்தை நேசிக்கும் தன்மையே தனது ஆத்ம புகலிடமாக இருக்கும் என்கிறார். ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப் படும் குறுகிய பார்வை கொண்ட கொண்ட தேசியம் இயற்கைக்கு மாறாததாகவும் புதிய அடிமைத்தனத்தை உருவாக்கம் செய்வதாகவும் இருக்கும் என அவர் கருதினார்.  தான் உயிரோடு உள்ள வரை கண்மூடித்தனமான தேசபக்தி,
மனித நேய செயல் பாடுகளை வெல்வதற்கு விட மாட்டேன் என்றும் சொல்கிறார்.       

                   தாகூர் காந்திக்கு 1921 ஆம் ஆண்டு எழுதும் கடிதம் ஒன்றில்
ஸ்வராஜ் என்பதே ஒரு மாயை எனவும், மேற்கில் இருந்து காந்தி கற்றதை
இங்கு இந்தியாவிற்கு பொருத்த நினைப்பதாகவும் மனித குல விடுதலை மட்டுமே நமது நோக்கமாக இருக்க வேண்டும், தேசம் என்ற மாயைக்குள் சிக்குவது அதற்கு எவ்விதத்திலும் உதவுவதாக இருக்காது என்று குறிப்பிடுகிறார்.       

                  நமது நாட்டு மொழியில் தேசம் என்ற சொல்லாட்சியே இல்லை என்பதாகவும் மற்றவர்களிடமிருந்து கடன் வாங்கி நாம் அதை பயன்படுத்துகையில் அது எந்த விதத்திலும் முழுமை பெற்ற வெற்றியை கொடுத்து விடாது என்றும் தாகூர் அக் கடிதத்தில் கூறுகிறார்.  மேற்கு தேசங்களின் வெற்றி கொண்டாட்டங்களை  தான் பார்த்து இருப்பதாகவும், அது சற்றும் மன முதிர்ச்சி இல்லாத  புனிதமற்ற விருந்திற்கு பின்னர் வரும் வெற்று கூச்சல்களாகவே தனக்கு தோன்றியதாக அவர் மேலும் சொல்கிறார். அப்படிப்பட்ட ஒரு பொருந்தா தேசிய கோட்பாடு இந்த தேசத்திற்கு தேவை இல்லை என தாம் கருதுவதாக அவர் கூறுகிறார்.
(Modern review, May 1921)

                  ஒத்துழையாமை இயக்கத்தை கடுமையாக குறை சொல்லும் தாகூர் அவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக காந்திஜி அவர்கள் அந்த இயக்கம் ஒரு விவசாய களை எடுத்தல் போல் தேசத்திற்கு மிக அவசியமான ஒன்று எனவும், மறுப்பு கூறவே மறந்து விட்ட இந்த தேச மக்களுக்கு, அரசு மக்களோடு ஒன்றோடு ஒன்றாக பணி செய்ய வேண்டும் என கூறும் ஒரு அறைகூவல் தான் என்று விளக்கம் அளிக்கிறார். ஐரோப்பாவின் காலில் விழுந்து கிடைக்கும் ஒரு தேசம் மனித குலத்திற்கு என்ன நம்பிக்கை கொடுத்து விட முடியும். ஒரு எழுச்சி அடைந்த தேசமே அமைதியின் செய்தியை உலகிற்கு வழங்க முடியும். அதனை அமைதி  வழி போராட்டம் மூலம் இந்த தேசம் அடையும் என்று எங் இந்தியாவில் ஒரு கட்டுரை மூலம் காந்தி கவிஞருக்கு பதில் அளிக்கிறார்.
(The Poet's Anxiety - Young India June 1, 1921)

                    தேசியம், இராட்டை மற்றும் ஒத்துழையாமை இயக்கம் பற்றிய
மற்றொரு பதிவில் காந்தி தண்ணீரில் மூழ்கும் ஒருவன் மற்றவர்களை காப்பது பற்றி நினைக்க முடியாது.  முதலில் அவன் திடமாக இருக்கையில் தான் அது சாத்தியமாகிறது. இந்திய தேசியம் என்பது  எல்லா தரப்பையும் உள்ளடக்கிய, அனைவருக்கும் வலு தரும் படியான ஒன்றாக வளர வேண்டும்.
அதன் பின்னர் மனித குலம் முழுவதற்கும் அது தொண்டாற்றுவது சாத்தியப்படும் என்கிறார். ஒரு பூனையின் வாயில் அகப்பட்ட எலியை போன்று உள்ள இந்த தேசம் எந்த தியாகத்தை பற்றி புரிந்து செய்து விட முடியும் என்று வினவுகிறார்.

                   இவ்வாறு வன்முறை அற்ற, அனைவருக்கும் இடமளிக்கும் ஒரு தேசியம் காந்தி பேசிக்கொண்டு இருக்கும் போதே, அதனை சண்டையிடும் தேசியம் ( pugnacious nationalism ) என்று தாகூர் வர்ணிக்கிறார். ( Modern Review - Sep 1925). ஒருமித்த தேசியத்தை கட்டமைக்க மக்களின் இதயங்கள் ஒன்று பட வேண்டும் என கவி தாகூர் சொல்லி வெறும் பொருளாதார ஒற்றுமையை வளர்ப்பது வெறும் வியாபார ரீதியிலான, வெளிப்பகட்டான தேசப்பற்றாகி
விடும் என எச்சரிக்கிறார். இப்படி பல வேறுபாடுகளோடு இந்த இருவரின் நட்பு
இறுதி வரைக்கும் அறிவு பூர்வமான உரையாடல்களுடன் நீடித்தது.

                 இந்த சிறந்த இரு மனிதர்களின் பெரும் போக்கான சிந்தையோடு இன்றைய குறுகிய இந்து தேசியத்தை நாம் ஒப்பிடுகையில் எவ்வளவு பெரிய வித்தியாசம்.. இன்று அரசு அதிகாரத்தை பிடித்து விட்ட கோல்வால்கரின் சிஷ்யர்கள் இந்திய தேசியத்தை இந்து தேசியம் மட்டுமே எனவும் மற்ற அனைவரும் இரண்டாம் தர குடிமக்களே என கொக்கரிக்கும் நிலையை காண்கிறோம். ஒரு புறம் இந்த நாட்டில் எல்லா பிரிவு மக்களையும் தேசியத்தில் இணைக்கும் சவாலோடு நவீன தேசத்தை கட்டமைக்க சாதி மூலம் பிரிந்து  கிடப்பவர்களையும் ஒன்று படுத்த வேண்டி உள்ளது. ஆனால் சாதி அமைப்பானது வரலாற்றில் ஒரு கட்டத்தில் பௌத்த மத தாக்கத்தால் சற்றே பலவீனம் அடைந்ததால் தான் இந்த தேசத்தை அந்நியர்கள் வந்து கைப்பற்றும் சூழல் வந்தது என்று இவர்களின் குரு கோல்வால்கர் கூறி இருக்க  சாதி அகற்றும் பணியை இந்த கூட்டம்   செய்யும் என  சிலர் நம்புவது அறியாமை தவிர வேறு என்ன?
கவி தாகூர் சொல்வது போல் ஐரோப்பாவில் இருந்து பெறப் பட்ட இவர்களின் இந்த இரவல் தேசிய வெறியை முறியடித்து நமது அரசியல் சட்டம் கூறும் காந்திய தாகூரிய அம்பேத்காரிய மனித நேய தேசியத்தை மக்கள் மத்தியில் பிரபல படுத்துவதே இன்றைய காலத்தின் கட்டாயம்.

           
       

               


                 

                 
               

             
             

               


                   

                    

Comments

Popular posts from this blog

Hindus in Hindu Rashtra book - my impressions

Spectrum of Left - Part 1 / Time to retrieve left from orthodoxy

கொடைமடம் - நாவல் வாசிப்பு