டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு - தொகுதி 7


     இந்தியாவில்  பௌத்தத்தின் வீழ்ச்சிக்கான காரணங்கள்

 

           இஸ்லாமியரின் படையெடுப்பே இந்தியாவில் பௌத்தத்தின் வீழ்ச்சிக்கான காரணம் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இருக்க முடியாது
என அம்பேதகர் குறிப்பிடுகிறார். புத் என்ற அரபு சொல்லுக்கு அர்த்தம் உருவச்சிலை. எனவே பௌத்த சமயம் என்பது உருவவழிபாட்டு சமயம் என்று எண்ணிய இஸ்லாமியர், உருவ சிலைகளை உடைக்க வேண்டும்
என்ற அவர்களின் சமய நோக்கத்திற்கு ஏற்ப பௌத்த விஹாரங்கள்  மற்றும் அதோடு கூட பௌத்த பிக்குகளையும் முஸ்லிம்கள் அழித்து ஒழித்து விட்டனர். இப்படி கிட்டத்தட்ட ஆசியா முழுவதிலும் (ஆப்கானிஸ்தான், பாக்த்தீரியா,பார்த்தியா காந்தாரம் சைனீஸ் துர்கிஸ்தான் )பௌத்த மதத்தை  இஸ்லாம் அழித்து விட்டது. ( page 104 )

        ஆனால் பிராமணியம் பௌத்தம் இரண்டையும் இஸ்லாம் தாக்கியது.
ஒன்று மட்டும் ஏன் நிலைத்து நிற்கிறது (பிராமணியம்) மற்றொன்று அழிந்து விட்டது என்ற கேள்விக்கு பதில் சொல்லும் அம்பேதகர் பௌத்தத்தின் வீழ்ச்சி இஸ்லாமின் வாளால் தான் ஏற்பட்டது என்று மீண்டும் வலியுறுத்தி சொல்லி விட்டு மூன்று காரணங்களை பிரதானமாக எடுத்து சொல்கிறார்.
1 இஸ்லாமிய படையெடுப்பின் பொது பிராமணியம் அரசு ஆதரவு பெற்றுள்ள மதம் . 2 பௌத்த சமய குருமார்கள் அமைப்பு இஸ்லாமிய வாளுக்கு முழுமையாக இரையானது. இந்த தாக்குதலில் இருந்து அது மீளவே இல்லை  3 பௌத்தர்கள் ப்ராமணீயத்தை ஆதரிக்குமாறு இந்திய அரசர்களால் பெரிதும் கொடுமைப்படுத்தப் பட்டதால் பௌத்தர்கள் அதில் இருந்து தப்பிக்க இஸ்லாம் சமயத்தில் இணைந்தனர். (page 105). இஸ்லாமின் தாக்குதலில் இருந்து தப்பி வாழ்வதற்கான சூழல் ப்ராமணீயத்திற்கு சாதகமாகவும் பௌத்தத்திற்கு பாதகமாகவும் இருந்து இருக்கலாம் என அவர் சொல்கிறார்.

          முன்னூறு ஆண்டு காலம் தொடர்ந்த இஸ்லாமிய படையெடுப்பின் போது இந்தியா முழுவதும் ஆண்ட அரசர்கள் அனைவரும் வைதீக பிராமண சமயத்தை சேர்ந்தவர்களே என்பதை மட்டும் கவனிக்க வேண்டும். ப்ராமண சமயமும் முஸ்லிம்களால் அடித்து நொறுக்கப் பட்டது. ஆனாலும் இந்து அரசர்களின் ஆதரவு அதற்கு கிடைத்தது. பௌத்தம் கேள்வி கேட்பாரற்று அனாதையாகி விட்டிருந்தது. படையெடுப்பாளர்கள் மூட்டிய தீயில் கருகி மறைந்தது. பௌத்த சமய புரோகிதர்கள் முற்றிலுமாக அழிக்க பட்டு விட்டதால் புதிய புரோகிதர்கள் உருவாகி வருவது கடினமாகி வரும் சூழலில் பௌத்த மக்கள் சிறிது சிறிதாக இஸ்லாம் மதத்தை தழுவினார். ஒரு கட்டத்தில் பௌத்தம் முற்றிலுமாக இந்தியாவில் இருந்து மறைந்தது.

  எதிர் புரட்சியாளரின் பைபிள் - பகவத் கீதை

         ஜைமினியின் பூர்வ மீமாம்சை கோட்பாடுகளை காப்பாற்றுவதே பகவத் கீதையின் முக்கிய நோக்கம் என அம்பேதகர் குறிப்பிடுகிறார். கீதை சொல்லும் கர்ம யோகம் , ஞான யோகம் போன்றவையெல்லாம் வெறும் வார்த்தை பிரயோகங்கள் தவிர உயரிய தத்துவ விசாரம் ஒன்றும் அதில் இல்லை. ஜைமினியின் கர்ம காண்ட கோட்பாடுகளையே அது கர்மயோகம் என்று சொல்கிறது. ஞான யோகம் ப்ரம்ம சூத்திரத்தில் அடங்கியது என்றும் கீதை கூறுகிறது. கர்மத்தை பற்றி பேசும் போது செயல் அல்லது  செயலின்மை பேசாமல் சமய வினை,,விரதங்கள் பற்றி மட்டுமே பேசுகிறது. அற்ப விஷயங்களை பேசும் கட்சி பிரசுரம் போல் கீதை உள்ளது என்று அம்பேதகர் கடுமையாக கூறுகிறார்.  ( பக்கம் 300 )

         வருண தர்மத்தை எதிர்த்தும் அகிம்சையை வலியுறுத்தியும் புத்தர் பெரும் புரட்சி செய்து வெற்றி பெற்றிருந்த சூழலில் வருண முறைக்கு ஆதரவாகவும் கொலை செய்வது சத்திரிய தர்மம் என்றும் வேதத்தில் உள்ளவற்றை அப்படியே போதித்ததன் மூலம் புத்த தர்மத்திற்கு எதிர் புரட்சியாக பகவத் கீதை விஷமத்தனமாக செயல் பட்டதாக அம்பேதகர் சொல்கிறார். கீதை மட்டும் இல்லை என்றால் புத்தம் வென்று இருக்கும் என்பது அவர் முடிவாக இருக்கிறது , கண நேர சிந்தனைக்கு கூட லாயக்கு அற்ற எதிர் புரட்சி கருத்துக்கள் (ஜைமினி மீமாம்சம் ) ஒழிக்கப் பட்டு இருக்கும். மீமாம்சம் இன்று வரை வாழ்கிறது என்றால் அதற்கு கீதையின் தத்துவ பாதுகாப்பே காரணம்.

        கீதை வேதத்திற்கும் சாஸ்திரங்களும் எதிரானது என்று சொல்வது முற்றிலும் தவறு. ஏனென்றால் வேதங்களையும் சாஸ்திரங்களையும் தூக்கி பிடிக்கவே செய்கிறது கீதை.புத்தரின் பகுத்தறிவு வாதத்திற்கு எதிராக தாக்குதல் தொடுத்த ஜைமினியின் மீமாம்சைக்கு கீதை காலத்தால் மிக முற்பட்டது என்ற வாதத்திற்கு பதில் கூறும் அம்பேதகர் கீதை பிற்காலத்தியது என்பதற்கு கீதையிலேயே சான்றுகள் உள்ளது என்கிறார். கீதையின் செயல் 3,
செய்யுள் 9-13 பகுதிகள் நேரடியாக பூர்வ மீமாம்சை கோட்பாடுகளை கையாள்கிறது. இதனை திலகர் போன்றவர்களும் ஒப்பு கொள்கின்றனர்.
கீதை ஜைமினிக்கும் ப்ரம்ம சூத்திரங்களும் மிகவும் பிற்பட்டது என்பதற்கு அகச்சான்றுகள் உள்ளன என்றும் அம்பேதகர் கூறுகிறார்.

பகவத் கீதையும் புத்த கோட்பாடுகளும்

       கீதையும் புத்த மதமும் அக்கால கட்டத்தில் நிகழ்ந்த ஆன்மீக புரட்சியின் இருவேறு வடிவங்கள் . கீதை இவ்விரண்டில் முந்தைய முழுமை பெறாத வடிவமாக இருக்கலாம். பின்பு பிராமணீயத்தை தூக்கி பிடிப்பதற்கு செய்யப் பட்ட முயற்சியாகவும் இருக்கலாம்.

       கீதை உபநிடதங்களை அடிப்படையாக கொண்டது. புத்த மதத்திற்கும் அதற்கும் எந்த ஒற்றுமையும் இல்லை என்பார் உண்டு. கீதையில் சாங்க்ய தத்துவங்கள் உள்ளன என்பது போல புத்த தத்துவங்களும் நிறைந்து உள்ளன என்று அம்பேதகர் குறிப்பிடுகிறார். (பக்கம் 307) இரண்டும் ஒத்து இருப்பது கருத்தில் மட்டும் இல்லாது மொழியிலும் கூட. சில உதாரணங்கள் : பிரம்ம நிர்வாணத்தை பற்றி கீதை ஆராய்கிறது. இந்த நிர்வாண கோட்பாட்டை கீதை எந்த உபநிடதங்களில் இருந்தும் பெற வில்லை. நிர்வாணம் என்ற சொல்லே உபநிடதங்களில் இல்லை. இக்கருத்து புத்த மதத்திற்கு உரியது. அங்கிருந்தே கடன் பெறப்பட்டுள்ளது. கீதையின் உண்மை பக்தன் இயல்பு பற்றி கூறும் செய்யுள் 13-20, இயல் 7, புத்த நூல்களான மஹாபதன சுத்தா, தே விஜ்ஜ சுத்தா ஆகிய வோடு ஒத்து இருப்பதாய் காண முடிகிறது. மேலும் புத்த மத கோட்பாடுகளை வரிக்கு வரி கீதை இயல் 3, செய்யுள் 5,6,18,19 ஆகியவற்றில்
கையாள்வதை எவரும் மறுக்க மறைக்க முடியாது என அம்பேதகர் கூறுகிறார். இதை போன்று மேலும் சில உதாரணங்களை சுட்டும் அம்பேதகர், சுருக்கமாக கீதை புத்த மத சுத்தாக்களை முன் மாதிரியாக கொண்டு அமைக்க பட்டு  உள்ளது என்று முடிவாக சொல்கிறார். புத்த சுத்தாக்கலும் கீதையும் உரையாடல் வடிவில் உள்ளன. சரணடைதல் தத்துவம் கீதையில் கிருஷ்ணன் இடத்திலும் புத்தத்தில் சங்கத்திலும் தம்மத்திலும் இருக்கின்றது. இந்த வகையான வேறு எதிலும் காண முடியாது என்றும் அம்பேதகர் குறிப்பிட்டு உள்ளார். (பக்கம் 307) பகவத் கீதை காலம் பற்றி குறிப்பிடும் அம்பேதகர் அது ஒரே கால கட்டத்தில் எழுத பட்டு இருக்கவாய்ப்பு இல்லை எனவும் மூல கீதையில் பல்வேறு கால கட்டத்தில் இடைச்செருகல்கள் ஏற்படுத்த பட்டதாகவும் கடைசியாக கி பி 400-464 காலத்தில் இடை செருகல் செய்யப்பட்டிருக்கலாம்.

ஆரியம் என்பது ஒரு இனமா

அம்பேத்காரின் இதே தொகுதியில் ஆரியம் பற்றிய விவாதமும் இடம் பெற்று உள்ளது. முதல் தொகுதி அளவிற்கு விரிவாக இல்லை என்றாலும் அதில் இடம் பெற்றுள்ள கருத்தை மீண்டும் வலியுறுத்துவதை நாம் காண்கிறோம். \
(பக்கம் 376) . ஆரியம் என்பது ஒரு இனமல்ல. ஒரு மக்கள் தொகுதியே. ஒரு இனம் இல்லை என்பதால் ஆரியன் என்று சொல்வதற்கு உரிய உடல் தன்மையோ உறுப்பு அமைப்போ எவரிடத்தும் குறிப்பாக காண முடியாது
என குறிப்பிடும் அம்பேதகர், வருணாஸ் என்பதில் உள்ள வருணா என்பது நிறத்தையும் அனாஸ் என்பது நாசி இல்லாமையையும் குறிப்பதாக கருதுவதே தவறு என்கிறார். கருமை நிறம் தட்டை நாசி கொண்ட அமைப்பு கொண்ட தனித்த எவரும் இல்லை. தஸ்யுக்கள் என கூறப்பட்டவர்களும் ஆரிய இனத்தவர்களே . கோட்பாடு சம்பந்தமாக வேறுபாடு ஏற்பட்டமையால் பிரிவு நிகழ்ந்து இருக்கலாம்  உடல் நிறம் பற்றிய தப்பெண்ணம் சிறிதும் இல்லாத ஒரு மக்கள் ஆரியர்கள் என அவர் மேலும் சொல்கிறார். இதற்கான சான்றை அவர் ரிக் வேதத்தில் இருந்து குறிப்பிடுகிறார்.

        ஆரியர்களுக்கு இந்தியா தான் தாய் நாடு என்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன என கூறும் அம்பேதகர், சூத்திரர்கள் ஆரிய படையெடுப்பாளர்களால்
வெல்ல பட்டனர் என்பது தவறான ஒரு நம்பிக்கை என்கிறார். சூத்திரர்களுக்கும்  தஸ்யூக்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஆரியர்கள் ராணுவ பலம் மிக்கவர்கள் என்று சொல்வதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. தேவர்கள் என சொல்ல படுபவர்கள் நில பிரபுக்கள் எனவும் தொழிலாளிகள் ஆரியர்களாக இருப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.
தஸ்யுக்களை விலகி சென்றதனால் ஆரியர் அல்லாதவர் என சொல்லலாமே அன்றி அவர்கள் சூத்திரர்கள் என்று சொல்வதற்கு ஆதாரம் இல்லை.
கவுடில்யரின் அர்த்த சாஸ்திரத்திலும் சூத்திரர் ஆரியர் என்றே கூறப்பட்டனர்.

       யஜுர் வேத ஒரு பாடலில் சூத்திரர்களுக்கு சிறப்பு அளிக்க கூறுகிறது. மஹாபாரத படி சூத்திரர்கள் ஒரு உயர்ந்த அரசியல் படிநிலை பெற்று இருந்தனர். சூத்திரர்கள் மன்னர் நிலையை எட்டியதையும் மஹாபாரத கதையில் காண முடிவதால் (பைஜாவனன் ) அக் கால கட்டத்தில் சூத்திரர் நிலை பற்றிய தெளிவு கிடைக்கிறது.

        மனுவுக்கு முந்தய இரு அரசர்கள் சூத்திரர்கள். இந்தியாவின் பேரரசர் அசோகர் ஒரு சூத்திரரே. சூத்திரர்கள் உயர்ந்த நிலையில் இருந்தனர் என்பதற்கு இதை விட சிறப்பான ஒரு உதாரணம் இருக்க முடியாது என்று அம்பேதகர் கூறுகிறார்.

         சூத்திரர்கள் வேதம் பயில்வதற்கு உரிமை இருந்ததையும் சாந்தோக்ய உபநிஷத்தில் காண்கிறோம். அவர்கள் முனிவர் ஆவதற்கும் ஒரு சிக்கலும்
இல்லாது இருந்ததை கவஸ் அலியுஸ முனிவரின் வரலாற்றில் பார்க்கிறோம்.

          அர்த்த சாஸ்திரத்தில் சொல்வது : சூத்திரன் பிறப்பால் அடிமை அல்ல. அவன் பெரும்பான்மை இனம் அல்ல. ஆனால் பிறப்பால் அவன் ஒரு ஆரியன் தான்.

          இவை எல்லாம் சூத்திரரும் ஆரிய இனத்தவரே என சொல்வதற்கு உள்ள அசைக்க முடியாத சான்றுகள். ஆனால் ஏன் மனு சூத்திரரை ஒடுக்கினார்? இந்த புதிர் சிக்கல் நிறைந்தது என சொல்லும் அம்பேதகர், ஆரியர்கள் தொடர்ந்து ஆரியர்கள் பண்பாட்டை ஏற்காதவர்களை மாற்றும் பணியில் ஈடு பட்டு வந்தனர். இருப்பினும் ஆரிய இனத்தை சேர்ந்த பண்பட்ட மக்கள் குழுவான சூத்திரர்கள் ஏன் முடக்கி வைக்க பட்டனார் என்பதற்கான விடையை இன்னும் வரலாற்றில் தேட வேண்டியுள்ளது என அம்பேதகர் முடிக்கிறார்.

                  ********************************************

       


     

       

   

          


             

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்