முத்துமீனாட்சி - 1892 ம் வருட தமிழ் புதினம்

   


 தமிழில் மூன்றாவதாக வெளிவந்த நாவல் அ மாதவையா எழுதிய "முத்துமீனாட்சி" படித்தேன். 1892 -ல் தொடராக வந்தாலும் அந் நாளில் விதவை மறுமணம், பெண்கள் கல்வி போன்றவைகள் கதையின் மைய ஓட்டமாக இருந்ததால் ஏற்பட்ட சர்ச்சையில் நிறுத்தப் பட்டு பின் மீண்டும் 20 வருடம் கடந்து சிறிய மாற்றங்கள் செய்யப் பட்டு புத்தகமாக வெளியிடப் பட்டது. 129 வருடம் கடந்தாலும் இன்று வாசிக்கும் போதும் சுவாரசியத்திற்கு குறைவில்லாமல் இருக்கிறது.

     ஒரு பிராமண பெண்  தனது கதையை சொல்லுவது போல் கதை அமைத்து உள்ளார் ஆசிரியர். இன்றைய பெண்களின் சூழலுக்கும் அன்றைய சூழலுக்கும் தான் எவ்வளவு வித்தியாசங்கள். பெண் கல்வி கல்லாமை , சிறுவயதில் திருமணம், விதவை மறுமணம் அனுமதித்தல் , கணவன் மனைவி வயது வித்தியாசங்கள், இரண்டாவது அல்லது மூன்றாவது மனைவியாக திருமணங்கள் நடப்பது போன்றவைகள் இன்றைக்கு அருகிப் போய் உள்ளது. நல்ல சமூக மாற்றங்கள் பல போராட்டங்களுக்கு பிறகு வந்து இருக்கிறது. 

   அன்றைய சூழலில் இருந்து பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டு இன்றைய நாளில் இருந்தாலும் திருமண வரதட்சணை அல்லது டௌரி என்பது அந்நாளில் மணமகன் வீட்டார் பெண் வீட்டாருக்கு பணமாகவோ நிலம் ஆகவோ கொடுப்பது தான் வழக்கம் என இந்த நாவலில் திரும்ப திரும்ப சுட்டி காட்டப் படுகிறது. எந்த அளவிற்கு பெண்ணிற்கு வயது குறைவோ, மணமகள் இரண்டாம் தாரம் அல்லது மேலோ இருந்தால் தொகை அதிகமாக பெண் வீட்டார் டிமாண்ட் செய்து பெற்றுக்கொள்வார்கள் என்பதாகவும் கதையில் குறிப்பிடப் பட்டு உள்ளது. இன்றைய நாளில் பெரும்பாலான திருமணங்களில் மணமகன் வீட்டார் தான் பெண் வீட்டில் இருந்து டௌரி பெரும் வழக்கம் இருக்கிறது, இது போன்ற ஒரு நிலை எப்போது நூறு வருடங்களில் மாறியது என்பது ஒரு புதிராக உள்ளது. பெண்கள் வாழ்க்கையில் குறிப்பிட தக்க நல்ல மாற்றங்களை நாம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம் என்றாலும் திருமண பந்தங்களில் எதிர் மறையாக  சில அம்சங்களும்  மாற்றத்திற்கு உள்ளாகி இருப்பதாய் நாம் காண முடிகிறது. 

     கதையின் நாயகி சிறு வயதில் இருந்தே பெண்ணாக படும் துயரங்களை அவரே விவரிக்கிறார். பெண் என்பதால் அவருக்கு பள்ளி செல்லும் வாய்ப்பு இல்லாமல் தமையனிடம் இருந்தும் நண்பனிடத்தும் இருந்தும் கற்க முற்படும் போது அதற்க்கு அவள் தந்தையே எதிர்ப்பு தெரிவிக்க முற்படுகிறார். மிகச் சிறு வயதில் இருந்தே அனைத்து வீடு பணிகளையும் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப் படுவது, வயதிற்கு வருவதற்கு முன்பே முதல் இரவிற்கு மாமியாரால் அனுப்பப் படுவது, ஒரு சூழலில் விதவை ஆன பிறகு தொடர்ந்து அவமானப் படுத்தப் படுவது என பல துயர சம்பவங்களின் ஊடாக கதை பயணிக்கிறது.நன்றாக படித்த அண்ணனின் உதவி பெற்று கொண்டு முன்பே காதலித்த நண்பனை கணவன் இறந்த பின் கரம் பிடித்த பின் அதை ஏற்றுக் கொள்ளாத சமூகம் எவ்வாறு அந்த "புரட்சி" தம்பதியை ஒதுக்கி வைக்க முற்படுகிறது என்பதெல்லாம் இப்படியெல்லாம் நடக்குமா என நினைத்து கூட பார்க்க முடியாத சமூக மாற்றங்களாக இன்றைக்கு வந்திருக்கிறது.  

        



      

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்