யுவால் நோவா ஹராரியின் ஹோமோ டியஸ் - நாளைய வரலாறு



     ஹோமோ டியஸ் - நாளைய வரலாறு  நூலின் சில கருத்துகள் பற்றி 

            இஸ்ரேலின் வரலாற்றுப் பேராசிரியர் யுவால் நோவா ஹராரியின்   இரண்டாவது புகழ் பெற்ற  ஹோமோ டியெஸ்  நூலைப் பற்றிய சில அவதானிப்புகளை நான் இந்த கட்டுரையில் கொடுத்து உள்ளேன் .

         அவரது முதல் நூலான ஹோமோ சாபியன்ஸ் போல இதுவும மனித வரலாறு பற்றிய நூலாசிரியரின் அவதானிப்பு. கிட்டத்தட்ட முதல் நூலின் தொடர்ச்சி என சொல்லலாம். மனித குலத்தின் எதிர் காலத்தை பற்றி இன்றைக்கு நம்ப  முடியாத பல விஷயங்களை நூல் பேசுகிறது.

 மனித வாத மதங்கள்  

          வேளாண் புரட்சிக்கு பின் கடவுள் வாதம் பேசும் மதங்கள் தோன்றியது  போல அறிவியல் புரட்சிக்குப் பின் மனித வாத மதங்கள் தோன்றின என யுவால் கூறுகிறார்.  வேறு சில அறிஞர்கள் சொல்வது போல யுவாலும் மார்க்சிசம் போன்ற தத்துவம் அளித்த இயக்கங்களை மனித வாதம் பேசுகின்ற மதங்கள் என்றே குறிப்பிடுகின்றார்.  பொதுவாக மதங்கள் சொல்கின்ற கடவுள் என்ற கருதுகோளுக்கு இங்கே மனித வாத மதங்களின் நம்பிக்கையான "பொன்னுலகு" என்பதை இணையாக கூறுவார்கள். இத்தகைய போக்கினை மார்க்சிஸ்ட்கள் ஒப்புக்கொள்ளா விட்டாலும் மேலோட்டமாக பார்க்கையில் இந்த வாதம் சரியாகவே படுகிறது. 

        மதங்களை பற்றி மேலும் கூறும் நூலாசிரியர் மனிதனை பெரும் எண்ணிக்கையில் ஒன்று படுத்தியதில் அவற்றிற்கு ஒரு பெரும் பங்கு உள்ளது என்கிறார். மனிதன் பல விதமான கதை கட்டும் திறனால் ஒன்று பட்டு இருக்கிறான் என்பது யுவாலின் கூற்று. அது மதங்கள் ஆகட்டும், தேசங்கள் ஆகட்டும், பணம் அடிப்படையாக உள்ள பொருளாதார அமைப்புகள் ஆகட்டும் எல்லாவற்றுக்கும் fiction அல்லது மனித கற்பனையே மூலம் என யுவால் கூறுவது ஒரு புதிய கருத்தாக்கமாக கருதப் படுகிறது. இந்த கற்பனை செய்யும் திறனால் தான் மனித குலமே ஒன்று பட்டு சாதனைகள்  செய்து  வருவதாக யுவால் தனது முதல் நூலில் வாதிடுகிறார்.  இந்த வாதத்தின் தொடர்ச்சியாகத் தான் அவர் மனித வாத மதம் என்பதையும் இரண்டாவது தொகுதியில் அவர் குறிப்பிடுவதாக நான் பார்க்கிறேன். 

       "நீங்கள் ஒரு கம்யூனிச வாதியாக இருந்தால், " கம்யூனிச வாதமும் கிருத்துவமும் மிகவும் வேறு பட்டவை. ஏனெனில், கம்யூனிச வாதம் சரியானது, கிருத்துவம் தவறானது" என்று நீங்கள் வாதிட கூடும். மதங்களின் மரணத்துக்கு பிந்தைய கருத்துக்கள் கட்டுக்கதைகள் என்றாலும் இவை பற்றி பேசாத கம்யூனிச வாதம் அதனால் ஒரு மதம் இல்லை என்றாகி விடாது என சொல்லும் யுவால், மாறாக அந்த கம்யூனிஸவாதிகளின் நம்பிக்கையில் கம்யூனிசம் சொல்லும் கருத்தாக்கமே ஒரே மதம் என்கிறார்.  இதைப் போல் தான் ஒவ்வொரு மதத்தின் விசுவாசியும் நம்புகின்றனர் என்று அவர் கூறுகிறார். மதத்தையும் ஆன்மிகத்திற்குமான வேறுபாட்டை சொல்லும் அவர், மதம் என்பது ஓர் ஒப்பந்தம், ஆனால் ஆன்மிகம் என்பது ஒரு பயணம் என்கிறார். ஏதேனும் ஒரு மதத்தின் வழிகாட்டுதல் இல்லாமல் சமூக ஒருங்கிணைவு சாத்தியம் இல்லை எனவும் யுவால் கருதுகிறார். 

        நவீன வரலாறு என்பது மனித வாதம் என்ற குறிப்பிட்ட மதத்திற்கும் அறிவியலுக்கும் இடையேயான ஓர் உடன்படிக்கை உருவாக்குகின்ற ஒரு செயல்முறை என்பது ஒரு மிகத் துல்லியமான அணுகுமுறை என நூல் வரையறை செய்கிறது. மனித வாழ்வின் நோக்கம் பற்றி வில்ஹெம் வான் ஹம்போல்ட் என்பவர் சொல்வதை யுவால் மேற்கோள் காட்டுகிறார். "வாழ்வின் மிக பரந்த அனுபவங்களை ஞானமாக காய்ச்சி வடிப்பது தான் இருத்தலின் நோக்கம்" . மனிதன் எல்லோரின் அனுபவங்களும் வேறு வேறு தன்மையும் முக்கியத்துவமும் கொண்டவை எனும் ஆசிரியர், ஒரு ஐன்ஸ்டீன் அல்லது பீத்தோவனின் அனுபவம், ஒன்றுக்கும் உதவாத குடிகாரனின் அனுபவத்தை விட அதிக மதிப்பு வாய்ந்தது. ஆகவே இருவரும் சமம் என கூற முற்படுவது நகைப்புக்கு உரியது என்கிறார்.  

பிரக்ஞை (consciousness)

       மனிதனை மற்ற உயிரினங்களில் இருந்து வேறுபடுத்தும் ஒரு முக்கிய விஷயம் இந்த பிரக்ஞை, awareness, consciousness அல்லது, 'தான்  என உணரும் தன்மை' என்பது. யுவால் இந்த பிரஞை பற்றி "மன ரீதியான ஒரு மாசுபாடு " என மட்டுமே அறிவியல் சொல்வதாக கூறுகிறார். இந்திய மதங்கள், குறிப்பாக அத்வைதம் போன்றவை பிரக்னைக்கு அதிக முக்கியத் துவம் தருவது நாம் அறிந்து இருக்கிறோம். கடவுள் எனும் வார்த்தை கூட "உள்ளே இருப்பது" எனவும் அதை உணர்வதே ஆன்மிக உச்சம் அல்லது வீடு பேறு enlightenment என நமது தத்துவ கருத்தாக்கம் சொல்லுகிறது. அதை ஒரு தூசி மட்டுமே என அறிவியல் சொல்வதாக இந்த நூலில் படித்தது மிக சுவாரஸ்யமாக இருந்தது.

முதலாளித்துவ வெற்றி -பகிர்வு தர,      மையத் தர செயலாக்கம்         

     இன்றைய நவீன யுகத்தில் முதலாளித்துவம் வெற்றி பெற்று விட்டது என்ற கருத்து கொண்டுள்ள நூலாசிரியர் கூறுவதாவது, ' கம்யூனிச பரிசோதனையோடு ஒப்பிடும்போது முதலாளித்துவ சமுதாயத்தில் இருந்த பகிர்வு அதிகார முறைமையே அந்த வெற்றிக்கு காரணம் என குறிப்பிடுகிறார். கம்யூனிஸ முறையில் இருந்த கூட்டுத் தலைமை முறையே அதனுடைய தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்றும் கூறுகிறார்.  

படிமுறைத் தீர்வுகள் (algoritham ) - தரவு வாதம்

        மனிதனின் எதிர் காலத்தை இனி படிமுறை தீர்வுகளே தீர்மானிக்கும் என யுவால் கூறுகிறார். 18 ம் நூற்றாண்டில் உலகம் கடவுள் மைய வாதத்தில் இருந்து மனித வாதத்திற்கு மாறியதை கூறும் ஆசிரியர் இனி வரும் காலம் மனித மையத்தில் இருந்து தரவு மைய வாதம் நோக்கி செல்லும் என கூறுகிறார். அதாவது உலகம் மனித புரட்சியில் இருந்து தரவு புரட்சி நோக்கி இன்னும் சில பல ஆண்டுகளில் பயணிக்க கூடும் என்பது யுவால் அவர்களின் கணிப்பு. தரவுவாதப் புரட்சி நிகழுவதற்கு இன்னும் முப்பது அல்லது நாற்பது ஆண்டுகள் ஆகலாம். மனிதவாதப் புரட்சிகூட இரவோடு இரவாக நிகழவில்லை.இந்த மாபெரும் படிமுறைத் தீர்வுகள் எங்கிருந்து வருகின்றன? இதுதான் தரவுவாதத்தின் மர்மமாகும். கடவுளையும் அவருடைய திட்டத்தையும் மனிதர்களாகிய நம்மால் புரிந்து கொள்ள முடியாது என்று கிறித்தவ மதம் கூறுவதைப்போல, புதிய படிமுறைத் தீர்வுகளை மனித மூளையால் புரிந்து கொள்ள முடியாது என்று தரவுவாதம் பிரகடனம் செய்கிறது.

எதிர்கால மனிதன் - future of humans

            புத்தகத்தில் யுவால்  நம்மை பயமுறுத்தும் சில விஷயங்களைக் கணிக்கிறார். ஹோமோ சேபியன்களின் கடைசி சில தலைமுறைகளாக நாம் இருக்கிறோம் என்றும், ஹோமோ சேபியன்ஸ் தற்போதைய வடிவத்தில் இல்லாமல் போய்விடும் என்றும் அவர் கூறுகிறார். மனித இருப்பின் 100,000 ஆண்டுகளுக்குப் பிறகு இது நிகழ்கிறது. AI மற்றும் உயிரியல் தொழில்நுட்பத்தின் செல்வாக்கு காரணமாக மனித இனம் தோற்றத்தில் பெரிய மாற்றங்களைக் காணும். அல்காரிதம்களைப் பயன்படுத்துவதன் மூலம் மனித மனதைப் படிப்பது முதன்முறையாக சாத்தியமாகும். உலகெங்கிலும் உள்ள தேவாலயங்கள் மற்றும் கேஜிபி மற்றும் உளவு அமைப்புகள் கடந்த சில நூற்றாண்டுகளாக இதை தீவிரமாக முயற்சி செய்தும் வெற்றி பெற இயலவில்லை. மூலக்கூறு உயிரியலின் முன்னேற்றம் மற்றும் AI மற்றும் DNA ஐப் பயன்படுத்தி நோய்களுக்கு சிகிச்சையளிப்பதன் காரணமாக மரணத்தை வெல்வது கூட சாத்தியம் ஆகலாம்.நீஷே கூறிய உலகை ஆளும் உண்மையான சூப்பர் மேன் உருவாகலாம் என்று யுவால் சொல்லு கிறார்.

       +++++++++++++++++++++++

       

     

       






 


 


 

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்