கன்னியாகுமரி காடு புதினங்கள்


          சற்று இடைவேளைக்குப் பின்  திரு ஜெயமோகன் அவர்கள் எழுதிய காடு மற்றும் கன்னியாகுமாரி  நாவல்கள் படித்தேன்.

           கன்னியாகுமாரி நாவலை  ஒரே மூச்சில் படித்து விட்டேன். சாதாரணமாக ஜெயமோகன் அவர்களின் புத்தகங்களில் உள் செல்வது சில நேரங்களில் சற்றே முயற்சி செய்து செல்ல வேண்டும்.(விஷ்ணுபுரம், ரப்பர்) ஆனால் கன்யாகுமாரி பொறுத்த வரையில் மிக எளிதில் புரிந்து கொண்டு படிக்க முடிந்தது. முக்கிய காரணம் அதன் நடை ஒரு வழக்கமான மொழியுடன் இருந்தது. பாதி பக்கங்கள் வரையில் அதிக வட்டார வார்த்தைகள் இல்லாத ஒரு நடை படிக்க மிக எளிதாக இருந்தது.

          பாலியல் வன்புணர்வு பற்றிய கன்னியாகுமரி கதை கொஞ்சம் தமிழ் சினிமா பாணியில் இருந்தாலும் சுவாரஸ்யமான ஒன்று. கதையில் பெண் கதாபாத்திரம் தான் முக்கியமாக வரப்போகிறது என்பது ஊகிக்க முடியாமல் கதையின் போக்கு தொடக்கத்தில் அமைந்து இருந்தது. என் பார்வையில் இந்த கதை ஒரு பெண் எப்படி பலாத்காரத்திற்கு ஆளான பின் அதனை எதிர் கொள்கிறாள் என்பது தி ஜா வின் 1950 களில் வந்த " மறதிக்காக " மற்றும் 1960 களில் வந்த ஜெயகாந்தனின்  அக்னிப்ரவேச சிறுகதையின் ஒரு வகை தொடர்ச்சியாகவே பார்த்தேன். "மறதிக்காக" சிறுகதையில் பாலியல் ரீதியாக "கெட்டு" போன பெண், அந்த விஷயத்தை கணவரிடம் சொல்லிய பின் அதில் இருந்து வெளி வர இயலாமல் அவள் இறந்து போவாள். அடுத்த பத்து வருடங்களில் வந்த அக்னிப்ரவேசத்தில்  அம்மாவும் பெண்ணும் சேர்ந்து, பெண் "கெட்டு" போனதை மறைக்க/மறக்க  முற்படுகின்றனர். இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் ஒரு பெண் இதே போன்ற ஒரு விஷயத்தை(கூட்டு வன் புணர்வு)  தன தந்தை கொடுக்கும் தைரியத்தில் வெற்றி கரமாக எதிர் கொண்டு சாதித்து காட்டுகிறாள் என்பதை கன்யாகுமரி கதை சொல்கிறது. தமிழ் சமூகம்  வன் புணர்வு பற்றிய கருத்துக்களில் மிக பெரும் மாற்றங்களை அடைந்து விட்டது என்று சொல்ல முடியாது என்றாலும்  பெண்களின் எண்ணப் போக்குகளில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு இருப்பதை இந்த கதைகளின் பரிணாமங்கள்  சுட்டுவதாகவே நான் பார்க்கிறேன். அந்த மாறுதலும், நிகழ்வை கடந்து செல்ல முற்படும் பெண் மனம் மூலமாகவே நிகழ்கிறதாய் கதை மாந்தர்கள் வாயிலாக நாம் அறிகிறோம்.
               காடு நாவல் ஜெயமோகன்  கிளாசிக் வகை புதினங்களில் ஒன்று. கொஞ்சம் அதிக பக்கங்கள் கொண்டது. எனக்கு முடிக்க பத்து நாட்கள் ஆனது. நான் அதன் விமர்சனங்களை படித்த பின் படித்ததால் மிக பெரும் எதிர்பார்ப்புடன் படித்தேன். நிச்சயம் கதையோடு முழுமையாக ஒன்றிப் போனேன். காட்டில் இருப்பதாய் உணர்வு இருந்தது என்னமோ உண்மை. காடு நான் முற்றிலும் அறியா பகுதி. ஆனால் காடு படித்த பின் காட்டுக்குள்ளே சில காலம் வசித்த உணர்வை கொடுத்தது. கிரிதரன், நீலி, குட்டப்பன், சினேகம்மை, ஐயர், வேணி இவர்களோடு  காட்டில் உள்ள யானை, மிளா இவற்றோடு சில மாதங்கள் நானும் இருக்க வாய்ப்பு கிடைக்குமா என்று ஏங்க வைத்தது என்று சொன்னால் அது மிகை இல்லை. "வறனுறல் அறியா சோலை' என்ன ஒரு நினைவில்  நிற்கும் சொல்லாடல். காட்டின் அனைத்து வகை கால நிலை வேறுபாடுகளும், அதில் மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் உள்ள இன்ப துன்பங்களும் படம் பிடித்தார் போல துல்லிய ஒரு விவரிப்பு. கல்வெர்ட் வேலை நடக்கும் பகுதி, நீலியை கிரி சந்திக்கும் இடம், மலை மகள் நீலி வீடு உள்ள இடம், அதற்க்கு செல்லும் வழி தடங்கள் நினைக்கும் நேரமெல்லாம் கண் முன் வருகிறது. காட்டில் மழை கொட்டும் இடங்கள் ரொம்பவும் தத்ரூபமாக விவரிக்க பட்டு, அந்த மழையில் நாமே நனைவது போன்று உள்ளது. கருப்பான அழகான பெண்களை பார்க்கும் பொழுது காடு கதையில் உள்ள நீலி இப்படி இருப்பாளோ என்ற எண்ணம் வருவதை தவிர்க்க முடிய வில்லை.  ஆசிரியரின் தமிழ் புலமை ஐயர் மூலமாக சிறப்பாக நாவலின் பல இடங்களில் வெளி படுகிறது.

          வறனுறல் என்று காட்டை ஆசிரியர் சொல்லும் பொது அதோடு அதில் வாழும் மனிதர்களும் ஈரம் உலராமல் ( they seem to be wet all the time) இருப்பதான ஒரு சித்தரிப்பு தமிழ் புதின மரபில் இருந்து கொஞ்சம கவனமாக விலகி சென்று இருப்பதை கவனிக்க முடிகிறது. காமம் பற்றிய விவரணைகளுக்கு (titillation) ஏராளம் வாய்ப்பு இருந்தாலும் ஆசிரியர் கவனமாக அதை தவிர்த்து கொண்டு செல்வதை காண முடிகிறது. ஒரு மலையாள தேச கதையை  மலையாளம் கலந்த தமிழ் மொழியில் படிக்கும் உணர்வு கதை நெடுகிலும் இருந்தது. டப் என்று நீலி கேரக்டரை கொன்று விடும் போது பெரும் அதிர்ச்சியை தந்தது. சட்டென்று கொன்று விட்டாரே  என்று ஆசிரியர் மேல் கோபம் கூட வந்தது. கொஞ்ச நேரம் புத்தகத்தை மூடி வைத்து பின்னரே தொடர முடிந்தது.

             காடு படித்த பின்னர் ஏதாவது ஒரு காட்டுக்கு சென்று அதை கதையில் உள்ள இடங்களோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. அந்த தூண்டுதலை கதை களம் தருகிறது.

             நிச்சயம் என்றென்றும் நினைவில் இருக்கும்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்