புத்தமும் (அ)சைவமும்

புத்தமும்  (அ)சைவமும் - பார்வை 

          டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நூல் தொகுதி 22 பௌத்த தம்மம் பற்றியது. பௌத்தம் பற்றி அறிய தமிழில் சிறந்த நூல் இது என்றும்
இந்திய பௌத்தர்களுக்கு இந்த நூல் பைபிள் எனவும் கூறலாம்.
அம்பேதகரின் தம்ம நூல்  பற்றி வேறு ஒரு கட்டுரையில்
பார்ப்போம்.  முதலில் புத்தமும் சைவமும் பற்றிய சில விஷயங்கள்.

          மிருகங்கள் உட்பட அனைத்து உயிர்களிடத்தும் அஹிம்சையை, கொல்லாமையை வலியுறுத்தும் புத்தர் எப்படி மாமிசம் உண்பதை ஏற்கிறார்  என்பது எனக்கு முரணாக இருப்பதாக பட்டது. அம்பேத்கர் அவர்கள் தனது தம்மம் தொகுதியில் புத்தர் அசைவம் உண்ணுதலை
முழுவதும் ஏற்கிறார் எனவும் மேலும் அவர்களுக்காக உயிர்கள் கொல்லப் படாத வரையில் புத்த பிக்குகளுக்கு அசைவ உணவு காணிக்கையாக ஏற்கத்தக்கதே என்றும் கூறுகிறார். இது தான் கவுதமரின் இறுதியான கருத்தாக அம்பேதகர் கூறுகிறார்.  மஹாயான பௌத்தத்தின் மாற்று கருத்துக்கள் பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை. இதை பற்றி இணையத்தை தேடியதில் வேறு சில விஷயங்கள் கிடைத்தது. புத்தர் பரிநிர்வாணத்திற்கு பிறகு சைவ உணவு மட்டுமே உண்டதாக மஹாயான பிரிவு புத்த மதத்தவர்கள் நம்புகிறார்கள். அந்த பிரிவு  புத்தர்கள் அவ்வாறு கூறுவதோடு அசைவ உணவை அவர்கள் அறவே தவிர்த்தும்  விடுகின்றனர்.

         புத்தர் சிறு வயதில் உழவுக்காக  தயார் செய்யப் படும் போது
நிறைய பூச்சிகளும் சிறு புழுக்களும் நசுங்கி மரணமுற்றத்தை கண்டு மிகுந்த
மன வேதனைக்கு உள்ளாகிறார். ஆனால் பெரிய உயிர்கள் வாழ்வதற்க்கு
இந்த பலிகள் தவிர்க்க இயலா ஒன்று என சமாதானம் அடைகிறார். இதை போல தான் அசைவ உணவிற்காக  உயிர்களை  கொல்ல நேர்வது உலகத்தில் தவிர்க்க  இயலாததாக அவர் கருதுவதாகவும் சொல்லப்படுகிறது. இறப்பதற்கு முன் இறுதியாக அவர் ஒரு கொல்லர் வீட்டில் பன்றி கறி உண்டதாகவும் அதன் ஒவ்வாமை காரணமாக அவர் மரணமுற்றதாகவும் சொல்லப் படுகிறது. அவர் உண்டது காளான் உணவு தான் பன்றி அல்ல என சொல்வோரும் இருக்கிறார்கள்.

        புத்தரின்  சம காலத்தவரான சமண மஹாவீரரின்
ஜைனத்திலும் கொல்லாமை மிக கண்டிப்பாக இன்று வரை
கடைபிடிக்க படும் ஒரு ஒழுக்க நெறி. அந்த காரணத்தாலேயே
அது இந்தியா தாண்டி செல்லவில்லை என்ற ஒரு கருத்தும் இருக்கிறது.
புத்தம், இந்திய பகுதி தாண்டி ஆசியாவின் பல நாடுகளிலும் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதற்கு சமணம் போல் அல்லாமல் பவுத்த கோட்பாட்டு நெறிகள் இடத்திற்கு ஏற்ப ஒத்துப்போகும் தன்மையுடன் இருந்ததால் தான் என கூறலாம். (சைவ அசைவ பழக்கம் உட்பட).

       பௌத்தர்களின் அசைவ உணவு பற்றிய ஒரு Huffington Post கட்டுரை,
கர்மா தத்துவம் என்பது பௌத்தத்தில் ஒரு பெரிய இடத்தை வகிக்கிறது.எனவும் பிக்குகளுக்கு உணவு  அளிப்பதன் வழியாக சாதாரணர்களுக்கு நல்ல கர்மாவிற்கு வாய்ப்பாக பிச்சை
காணிக்கை அவர்களிடம் ஏற்பது கடை பிடிக்க படுகிறது என்கிறது .ஒரு ஏழை
மிக சிரமப்பட்டு மாமிச உணவு எடுத்து கொடுக்கையில்  பிக்குகள் அதை
அசைவம் என சொல்லி மறுத்தால் அவன் மனது மிக கஷ்டப்படும் என புத்தர்
கருதுகிறார் என அக் கட்டுரையாளர் குறிப்பிடுகிறார்.

       அம்பேத்கார்  1948-இல் எழுதிய untouchables: who they were and when they
became untouchables..எனும் புத்தகம் இப்போது Beef Brahmins and Broken men என
மறு வெளியீடாக வந்துள்ளது. இதில் அம்பேத்கர் புத்த மதத்தவரை விட
தங்களை சூப்பர் புனிதர்களாக காட்டிக்கொள்ளவே பிராமணர்கள் சைவ உணவாளர்களாக மாறியிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.
மிக கடுமையாக பௌத்த தரப்பினரும் பிராமணர்களும் மோதி கொண்ட அந்த
சூழலில் இந்த மாற்றம் நிகழ்ந்து இருக்க வேண்டும் என்கிறார் அவர்.
பௌத்த பிக்குகள் உட்பட அனைவரும் மிருக மாமிசம் உண்ணும் அந்த
கால கட்டத்தில் பிராமணர்கள் அனைவரும் மாம்ச உண்ணியாகவே
இருந்தனர். பௌத்தர்களை தத்துவார்த்தமாக எதிர் கொள்ள முடியாமல்
பிராமணீயம் திணறிய அக் கால நேரத்தில் சைவ உண்ணிகளாக பிராமணர்கள் தங்களை மாற்றி கொண்டு பௌத்த பிக்குகளை விட சிறந்தவர்களாக காட்டி கொள்ள முற்பட்டனர் என்கிறார் அம்பேதகர்.

         அம்பேத்கர் ஒரு அனுமானத்தின் படி இவ்வாறு சொல்கிறார்
என்று வைத்து கொள்ளலாம்.மேலும் இந்தியாவில் உள்ள பிராமணர்களின் உணவு பழக்கத்தை ஆய்வு செய்தால் அவர்கள் ஒரே மாதிரியான சைவர்கள் அல்ல என்பதும் அவர்கள் வசிக்கின்ற இடத்தில் கிடைக்கின்றவற்றை உண்டு வாழ்பவர்களாகவும்  அவர்களது உப சாதிக்குள் என்ன உணவு புழக்கத்தில்  உள்ளதோ அதை புசிக்கும் வழக்கத்தோடு மற்ற சாதிகளை போலவே இருக்க
காண்கிறோம். இந்தியாவின் பல இடங்களில் பிராமணர்கள் தவிர மற்ற சாதியினரும் சைவ உணவு உண்பவர்களாக இருக்கிறார்கள். கிழக்கில் வங்காள பிராமணனும், வடக்கில் மைத்ரி, பூமிகார், கவுர்,பண்டிட்  மற்றும் சித்பவன் பிராமணர்கள் புலால் உண்பவர்கள். மேற்கிலும் தெற்கிலும் உள்ள பிராமணர்கள் சைவ உணவு பழக்கம் உடையவர்கள்.  பௌத்தம் பெரிய அளவில் செல்வாக்கு செலுத்திய இடங்களில் (உதா வடக்கு இந்திய பகுதிகள் ) பிராமணர்களில் சில பிரிவினர் இன்று வரை புலால் உண்ணுபவர்களாக இருக்கிறார்கள் என்பது விசித்திரமான உண்மை .

        பௌத்த மதத்தார் பெரும்பான்மையோர் அசைவ உண்ணிகளாகவே இருப்பதால் இன்று வரை மாறாமலும் வரலாறு முழுக்கவே அஹிம்சையையும் கொல்லாமையையும்  வலியுறுத்தி வரும்  சமண சமூகத்தவர்களே இன்றைய சைவ உணவு பழக்கத்திற்க்கு மூல காரணமாக இருக்க வாய்ப்புகள் அதிக அளவில் இருப்பதாக வரலாற்று ரீதியாக சொல்ல முடியும்.

         &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&











     

       

        .  



       

   

Comments

Popular posts from this blog

Hindus in Hindu Rashtra book - my impressions

Spectrum of Left - Part 1 / Time to retrieve left from orthodoxy

கொடைமடம் - நாவல் வாசிப்பு