ஜெயகாந்தனின் பாரீசுக்குப் போ

ஜெயகாந்தனின்  பாரீசுக்குப் போ

             ஜெயமோகனின் ஆல் அமர்ந்த ஆசிரியன் உரை கேட்ட பின்னர் ஜெயகாந்தனின் புத்தகம் படிக்க வேண்டும் என "பாரீஸுக்கு போ" நாவலை படித்தேன்.. முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முறை  வாசித்து இருந்தாலும் ஹீரோ சாரங்கனை தவிர வேறு சம்பவம் எதுவும் நினைவில் இல்லை. புதிதாக வாசிப்பது போலத் தான் இருந்தது. அன்றைய வயதில் வாசிப்பை  பொழுது போக்காக மட்டும் எடுத்து கொண்டு படித்ததால் கூட இருக்கலாம்.

                 1960 களில் ஆனந்த விகடனில் தொடராக வெளி வந்து பெரும் புகழும்
சில சர்ச்சைகளையும் ஏற்படுத்திய ஒரு நாவல். இன்றைக்கு படிக்கையிலும்
சுவாரஸ்யமாகவே உள்ளது. நடை சற்று பழையதாக முதலில்  தோன்றினாலும் சிறிது நேரத்தில் பழகி விடுகிறது. மிக நேரிடையாக கதை
மாந்தர்கள் நமக்கு அறிமுகம் ஆகி கதை அந்த கால கட்டத்துக்குள் சென்று விடுகிறோம். நான் ஒரே மூச்சில் இரண்டரை மணி நேரத்தில் கதையை வாசித்து முடித்து விட்டேன்.

                  தமிழ் நாடு நவீன யுகத்திற்குள் நுழைகையில் நடக்கும் ஒரு களம்
கதையின் காலம். நாவல் வாசிக்கையில் இரண்டு விஷயங்கள்  எனக்கு தோன்றியது. அதற்காகவே இந்த கட்டுரை என்று சொல்லலாம். ஒன்று இந்த
கதையில் உள்ள முக்கிய பெண் கதாபாத்திரம் டால்ஸ்டாயின்  அன்னா கரீனினாவை போல கணவனா காதலனா எனும் வாழ்க்கை சிக்கலை எதிர் கொண்டு ஆனால் அன்னாவை போல் இல்லாமல் ஓர் இந்திய பெண் போல் கணவனிடம் இருப்பது தான் சரி என  முடிவு எடுத்து வாழ்க்கையில் முன் செல்கிறாள்.இதற்குள் உள்ள சரி தவறுகளுக்குள் நாம் செல்ல முடியாது என்றாலும் ஒரு தமிழ் அல்லது இந்திய பெண்ணின் முடிவு இப்படி தான் இருக்கும் என கதாசிரியர் நினைக்கிறார் என்று எடுத்து கொள்ளலாம். இந்த கதையின் கணவன் மனைவி கதாபாத்திரங்கள் அன்னா கரினினா படம் பார்ப்பதும் பின் அதை பற்றி விவாதிப்பதும், அதை ஒட்டியே அவளின் முடிவும் அமைவதாக கதையோட்டம் செல்வது சிறப்பு.

                     பெரும்பான்மை முக்கோண கதைகள் நாம் வாசிக்கும் போது டால்ஸ்டாய் அவர்களுடைய அன்னா கரீனினா நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாது என்றாலும், தமிழ் சூழலில் ஒரு  பெண் மிகத் தெளிவாக பெரிய குழப்பம் ஏதும் இன்றி முடிவு எடுக்க முடிகிறது என்பதை இங்கே காண முடிகிறது.  டால்ஸ்டாயின் அன்னா கரீனினா நாவல், இவான் துர்கனேவ் என்ற மற்றும் ஒரு புகழ் பெற்ற ரஷ்யா எழுத்தாளர் உடைய கதையை தழுவி எழுதப் பட்டது என்றும் சொல்வார்கள். அன்று ரஷ்யாவில் பெரும் செல்வந்தராக இருந்த இவான் துர்கனேவ் தனக்கு பிடித்த, ஆனால் முன்பே வேறு ஒருவருடன் திருமணம் ஆகி விட்ட ஒரு பெண்ணுடன் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் கழித்தார் என்ற தகவல் எவரையும் ஆச்சர்ய படுத்தும். சற்றே சுமாராக உள்ள, பாடும் திறன் கொஞ்சம் இருந்த அந்த பெண்ணிற்காக தனது வாழ்நாள் முழுதும் செலவிட்டதோடு கோடிக்கணக்கான தனது சொத்துக்களையும் அந்த பெண்ணின் குடும்ப வாரிசுகளுக்கே துர்கனேவ் கொடுத்து விட்டார். இது எல்லாம் அந்த பெண்ணின் கணவரின் சம்மதத்தோடு தான் என்றும் சொல்லப்படுகிறது. திருமணம் ஆன பெண்ணை வேறு ஒருவர் விரும்புவது, அந்த பெண் தான் காதலிப்பவரோடு ஓடி விடுவது என்பது சில நேரங்களில் எங்கும் நடப்பதே என்றாலும் 100 ஆண்டுகளுக்கு முன்பு இப்படி வெளிப்படையாக நடந்து உள்ளது என்பது விசித்திரமே.This shows Love is blind and some facts are stranger than
even fiction. ( டால்ஸ்டாயின் பண்ணையில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணின் கதை என்று சொல்வோரும் உண்டு. எது சரி என்பதை டால்ஸ்டாய் மட்டுமே அறிவார்.)

                  இந்த நாவலை படித்த பின் எனக்கு தோன்றிய மற்றொரு விஷயம்
உன்னால் முடியும் தம்பி என்ற கமல் நடித்த டைரக்டர் பாலச்சந்தர் தமிழ் சினிமா படத்தின் கதை இந்த நாவலின் முக்கிய ஒரு பகுதியை ஒத்து
இருப்பதாக எனக்கு பட்டது. ஜெமினி கணேசனின்  பிலஹரி கதாபாத்திரம்
பாரிசுக்கு போ நாவலின்  ஹீரோ சாரங்கனின் தந்தையையும் கமல் சாரங்கனையும் போல இருப்பதாக எனக்கு தோன்றியது. முக்கியமாக இருவருக்கும் இடையில் நடக்கும் சங்கீதம் மற்றும் வாழ்க்கை பற்றிய விவாதங்கள் சாரங்கன் தந்தையுடன் நடத்தும் விவாதங்களை ஒட்டி இருக்கிறது.

                 
         
           
                 

               

           

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்